ஆட்சிக்கு பல வழிகளில் இடைஞ்சல் செய்கிறார்கள்! மத்திய அரசை சாடும் சபாநாயகர் அப்பாவு
தேர்தல் நெருங்குவதால் பாஜக ஆளாத, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறி வைத்து வருமான வரித்துறை சோதனை செய்கிறார்கள் என்றும் இந்த ஆட்சிக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள் என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், மாரியப்பன் ஆகிய இரு பட்டியலின இளைஞர்களை அப்பகுதி வழியாக வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் பெய்து, தாக்கி, மிரட்டிப் பணம் மற்றும் கைபேசிகளைப் பறித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மனோஜ்குமார் மற்றும் மாரியப்பன் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தமிழக சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’இந்த இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் படி நடக்கும் இந்த ஆட்சி உரிய தண்டனை பெற்று தரும். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தென் மாவட்டங்களில் இந்த மாதிரியான சம்பவங்களில் ஈடுபடலாம் என நினைப்பவர்களுக்கு தற்போது இருக்கக் கூடிய முதல்வர் சிம்மசொப்பனமாக விளங்குகிறார்.

அரசியல் கட்சிகளுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்பவது ஒன்றே ஒன்றுதான், இதுபோன்ற சம்பவங்களை பெரிதுப்படுத்தாமல் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்க வேண்டும். தமிழகத்தில் எந்தவிதமான மோதல்களும் இல்லாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை சொல்ல வேண்டும். மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் என்னென்ன குறைகள் உள்ளதோ அதற்கு தகுந்தார் போல் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளனர். அதனால் மக்கள் எதற்கும் அச்சப்படாமல் இருக்க வேண்டும்.
தேர்தல் நெருங்கும் போது வருமான வரித்துறை சோதனை வருவது வாடிக்கையான ஒன்று. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தாங்கள் ஆளாத மாநிலங்களை குறி வைத்து வருமான வரித்துறையைக் கொண்டு சோதனை செய்வது வாடிக்கையான ஒன்று. அதேபோல இந்த ஆட்சிக்கு ஆளுநரை வைத்து இடைஞ்சல் செய்கிறார்கள். என்னென்ன இடைஞ்சல்கள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறார்கள்’’ என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
நாளை தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட்!
திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!
சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!
இன்று 11 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!
குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!