முக்குலத்தோர் சமுதாயம் ஓபிஎஸ்சை கைவிட்டது ஏன்?


முக்குலத்தோர் சமுதாயம் ஓபிஎஸ்சை கைவிட்டது ஏன்?

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வந்த சமயத்தில் அவசர அவசரமாய் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்ததால் முக்குலத்தோர் சமுதாயத்தின் ஏகோபித்த எதிர்ப்பைச் சம்பாதித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் இன்றைக்கு அந்த சமூகத்தினர் ஒட்டுமொத்தமாக அவருக்கு ஆதரவாக நிற்பது யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆச்சரியம் தான்.

அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த எட்டு பேரில் சிவகங்கை பாஸ்கரனைத் தவிர எஞ்சிய ஏழு பேரும் மீண்டும் போட்டியிட்டார்கள். ஏழு பேரும் வெற்றியும் பெற்றார்கள். இவர்களில் ஓபிஎஸ் தவிர மற்ற ஆறு பேரும் இப்போது ஈபிஎஸ் முகாமில் இருக்கிறார்கள். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இவர்கள் அனைவரும் தங்கள் சமூகத்தவரான ஓபிஎஸ்சை கைவிட்டது ஏன்? இந்தக் கேள்விக்கு, கடந்துபோன வரலாறே பதில் சொல்லும்.

சசிகலா சிறை சென்றபோது அவரால் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பிற்பாடு சசிகலாவை ஓரங்கட்டியதோடு மட்டுமல்லாது முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த பலரையும் ஆட்சியிலும் கட்சியிலும் இரண்டாம் தரமாக்கினார். அவரது அதிகாரத்தில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் போன்றவர்களே கோலோச்சினார்கள். இதனால் ஈபிஎஸ் மீது சொல்லமுடியாத ஆதங்கத்தில் இருந்த முக்குலத்தோர் சமுதாய தலைகள் சிலருக்கு சசிகலா வந்தால்கூட பரவாயில்லை என்ற எண்ணம்கூட தலையெடுத்தது. அப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஓபிஎஸ்சை தனிமரமாக்கிவிட்டு ஈபிஎஸ்சின் தலைமை ஏற்கப்போய்விட்டார்கள். இதற்குக் காரணம், ஓபிஎஸ் மீதான நம்பிக்கையின்மை!

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

இதுவரை தன்னை நம்பி வந்த யாருக்கும் எதுவும் செய்யவில்லை; யாரையும் கைதூக்கி விடவில்லை என்பது ஓபிஎஸ் மீதான பொதுவான குற்றச்சாட்டு. அவரை நம்பி வந்த பதினோரு எம்எல் ஏ-க்கள் இப்போது இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டார்கள். தன்னை நம்பி வந்தவர்களையே காப்பாற்ற முடியாதவர், எப்படி தனது சமூகத்தை கைதூக்கிவிடுவார் என்ற அவநம்பிக்கையே முக்குலத்தோர் சமுதாயத்தினர் ஓபிஎஸ்சை விட்டு விலகிப் போகக் காரணம்.

ஓபிஎஸ் முதல்முறையாக முதல்வர் ஆனபோது அவரது தேனி மாவட்டமே மகிழ்ச்சியில் திளைத்தது. இனி, தங்கள் மாவட்டத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று எதிர்பார்த்தார்கள் தேனிக்காரர்கள். ஆனால் அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்திருந்தும், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்த்துப்போகச் செய்தார் பெரியவர் ஓபிஎஸ். அவரால் தேனி மாவட்டத்துக்கு அல்ல... அவரது பெரியகுளம் தொகுதிக்கே பெரிதாக எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பது தான் இப்போது வரை உள்ள நிஜம்.

ஆனால், இதற்கு நேர்மாறாக தன்னை தகவமைத்துக் கொண்ட ஈபிஎஸ், ஆட்சியில் இருந்த ஆண்டுகளில் தனது சமூகத்தை சேர்ந்த பலரையும் முடிந்தவரைக்கும் கைதூக்கிவிட்டார். தனது சாதியைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை முக்கியமான இடங்களில் உட்கார வைத்தார். கொங்கு மண்டலத்து காண்ட்ராக்டர்கள் அனைத்திலும் கொழித்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு “நம்மாளும் தான் இருக்காரு...” என்று அப்போதே பெருமூச்சுவிட்டது முக்குலத்தோர் சமுதாயம்

சசிகலாவால் தான் முக்குலத்தோர் சமுதாயம் அதிமுகவை ஆதரிப்பதாக ஒரு தோற்றம் உண்டு. ஆனால், அதில் உண்மை இல்லை. எம்ஜிஆர் காலத்திலிருந்தே முக்குலத்தோரில் பெரும்பகுதியினர் அதிமுக அனுதாபிகளாக இருந்து வருகிறார்கள். அதனால் தான் அந்த சமூகத்து மக்கள் அதிகமாய் வசிக்கும் ஆண்டிபட்டியையும் அருப்புக்கோட்டையையும் தேடிப்போய் தேர்ந்தெடுத்து போட்டியிட்டார் எம்ஜிஆர்.

அவர் வழி வந்த ஜெயலலிதா தன்னை தேவர் வீட்டுப் பெண்ணாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். அவரும் தனக்கான வெற்றித் தொகுதியாக எம்ஜிஆரின் ஆண்டிபட்டியையே ஒன்றுக்குப் பலமுறை தேர்வுசெய்தார். அவரது அமைச்சரவையில் முக்குலத்தோருக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் செய்துகொடுத்த ஜெயலலிதா, நலமாக இருந்தவரைக்கும் தேவர் குரு பூஜைக்கு ஆண்டு தோறும் தவறாமல் பசும்பொன் செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் முக்குலத்தோர் சமுதாயமும் அவரை தங்கள் வீட்டு மகளாகவே கொண்டாடியது.

ஜெயலலிதாவை கொண்டாடிய அளவுக்கு சசிகலாவை முக்குலத்தோர் சமுதாயம் கொண்டாடவில்லை. காரணம், சசிகலாவும் தன்னைச் சார்ந்தவர்களை மட்டுமே வளர்த்துவிட்டார். ஆட்சியில் இருந்த போது அவரும் அவரைச் சார்ந்தவர்களும் அனைத்திலும் கொழித்தார்களே தவிர அவர்களால் முக்குலத்தோர் சமுதாயம் பெரிதாக எந்தப் பலனையும் அடைந்துவிடவில்லை. வேண்டியதை கேட்டு வாங்கிக் கொண்டுதான் முக்குலத்தோருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தார்களே தவிர, எதுவும் இனாமாக நடந்துவிடவில்லை. அதனால் தான் ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலாவை ஆதரிக்க முக்குலத்தோர் ஆர்வத்துடன் முன்வரவில்லை. இன்றைக்கு அதேபோன்றதொரு நிலை தான் ஓபிஎஸ்சுக்கும் வந்திருக்கிறது.

சசிகலாவுடன் ஓபிஎஸ்
சசிகலாவுடன் ஓபிஎஸ்

அன்றைக்கு சசிகலாவைவிட கட்சி தான் பெரிது என நினைத்த முக்குலத்தோர் சமுதாயம், இப்போதும் ஓபிஎஸ்சைவிட கட்சி தான் முக்கியம் என நினைத்து மனமாச்சரியங்களை மறந்துவிட்டு ஈபிஎஸ் பக்கம் நிற்கிறது. ஈபிஎஸ் தங்கள் சமூகத்தை ஒதுக்குகிறார் என்ற பிரச்சினையெல்லாம் இப்போது அவர்களுக்குப் பெரும் குறையாகத் தெரியவில்லை.

இதற்கெல்லாம் அந்த சமூகத்துக்கு ஈபிஎஸ் நன்றிக்கடன் செலுத்துவாரா அல்லது தனது வழக்கமான பாணியை தொடர்வாரா என்பதில் இருக்கிறது அவருக்கான முக்குலத்தோரின் எதிர்கால ஆதரவு. ஏனென்றால், ஒருவரை எந்த அளவுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்களோ அந்த அளவுக்கு தங்களுக்கு ஒப்பாதவர்களை மூர்க்கத்தனமாக எதிர்க்கும் குணமும் முக்குலத்தோருக்கு உண்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in