நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த வார்த்தைகளை பேசக்கூடாது: எம்பிக்களுக்கு கடிவாளம்

நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த வார்த்தைகளை பேசக்கூடாது: எம்பிக்களுக்கு கடிவாளம்

நாடாளுமன்ற இரு அவைகளில் நடக்கும் கூட்டத்தில் எம்பிக்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு அதிரடி கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும்போதெல்லாம் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரச்சினைகள் கிளப்பி அவையை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், எம்பிக்கள் இடையே வார்த்தைப் போர் நடந்தும் வருகிறது. அப்போது, தவறான வார்த்தைகளை எம்பிக்கள் பயன்படுத்தியும் வருகின்றனர். இந்த வார்த்தைகள் அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. அவையை சுமுகமாக நடத்தவும், எம்பிக்கள் பயன்படுத்த முயலும் தவறான வார்த்தைகளுக்கு தற்போது மக்களவை செயலகம் கடிவாளம் போட்டுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் எம்பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், நாடகம், கபட நாடகம், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, கரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர் ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், ஏமாற்றினார், குழந்தைத்தனம், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, கோழை, கிரிமினல், முதலை கண்ணீர் ஆகிய வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், லாலிபாப், பாலியல் தொல்லை, குண்டர்கள், பாப்கட், முட்டாள்தனம் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதோடு, இவற்றை பயன்படுத்தினால் அவைத் தலைவர்களால், அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தில் தவறாக வார்த்தை பிரயோகம் செய்யும் எம்பிக்களுக்கு மத்திய அரசு கடிவாளம் போட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in