ஆளுநரின் தேநீர் விருந்தில் ஏதோ உள்நோக்கம் உள்ளது!

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் குற்றச்சாட்டு
ஆளுநரின் தேநீர் விருந்தில் ஏதோ உள்நோக்கம் உள்ளது!
ஆளுநர் ஆர்.என்.ரவி.

இன்று நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த விருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை புறக்கணித்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

தமிழக அரசியல் தளத்தில் ஆளுநருக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், அவர் திடீரென தேநீர் விருந்திற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரசியல் கட்சியினருடன் ஆளுநர் தேநீர் விருந்து நடத்துவது வழக்கமானது தான். ஆனால், இன்றைய தேதியில் இதுவரை அழைப்பு வந்ததில்லை. தமிழ் புத்தாண்டு சித்திரையா, தை மாதமா என்ற சர்ச்சை உள்ள நிலையில் இந்த நாளை ஆளுநர் தேர்வு செய்ததில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. இப்படி ஒரு சர்ச்சை உள்ளதால் கூட இன்றைய தேதியைக்கூட அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். தமிழகத்தின் எல்லா விஷயத்திலும் ஆளுநருக்கு எதிர்ப்பு குரல் எழுந்ததால் தமிழ் புத்தாண்டு என்ற பெயரில் எல்லா கட்சியினரையும் அழைத்து பேசலாம் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால், அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஒன்றும் இல்லாமல் அவர் அழைப்பு விட்டிருக்கமாட்டார். சில தேவைகளை வைத்து தான் இந்த தேநீர் விருந்துக்கு அவர் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விட்டுள்ளார். ஆனால், என்ன நோக்கம் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.

எந்த நோக்கத்திற்கு அவர் அழைத்தாலும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அவர் மதிப்பு கொடுப்பதில்லை. மாநிலங்களின் வளர்ச்சி பெரிய அளவு பயன்பாடு இல்லை என்று தமிழக ஆளுநர் பேசுகிறார். அது தேச வளர்ச்சிக்கு ஊறுவிளைவிக்கும் என்றும் கூறுகிறார். மாநிலங்கள் வளராவிட்டால் தேசம் எங்கு வளரும்? இப்படி மாநில மக்கள் உரிமையையும், மாநில மக்களின் வளர்ச்சியையும் பற்றிக் கவலைப்படாத, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத ஆளுநராக ஆர்.என்.ரவி உள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் எவ்வளவு காலதாமதம் செய்ய முடியுமோ செய்கிறார். அப்படிப்பட்டவர் நடத்தும் தேநீர் விருந்திற்குச் செல்ல வேண்டாம் என முடிவெடுத்தோம். இதுபோன்ற ஆளுநர் சந்திப்புகள் பலமுறை நடந்த போது மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்காமல் இருந்துள்ளது. ஆனால், ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முதல் முறையாக இந்த தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணித்துள்ளது.

கே.பாலகிருஷ்ணன்.
கே.பாலகிருஷ்ணன்.

சமூக நீதி பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தான் ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை அரசியல் தலைமைக்குழுவில் சேர்த்துள்ளது என்று பாஜக மாநில நிர்வாகி சேகர் கூறியுள்ளாரே?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொதுவாக சாதி அடிப்படையிலோ, இடஒதுக்கீட்டின் அடிப்படையிலோ அரசியல் தலைமைக்குழுவிலோ மத்தியக்குழுவிலோ, கட்சி பொறுப்புகளிலோ யாரையும் நியமிப்பதில்லை. பல்வேறு மாநிலங்களில் அவர்கள் ஆற்றிய பணியின் அடிப்படையில் தான் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படித்தான் ராமச்சந்திர தோமிற்கு தற்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ப சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம், வயது வரம்பு நிர்ணயம், பெண்கள் குறிப்பிட்ட சதவீத பொறுப்புக்கு வரவேண்டும் என்பதெல்லாம் இதில் அடங்கும். அனுபவத்தின் அடிப்படையில் தான் மேற்கண்ட நடவடிக்கைகளை கட்சி எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமிழை வைத்து வியாபாரம் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளாரே?

எதற்கெடுத்தாலும் இந்தி, எதற்கெடுத்தாலும் சமஸ்கிருதம் என்று பாஜக சொல்கிறது. மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதத்திற்கு மாற்றுகிறது. தமிழ்நாட்டில் ஒடுகின்ற ரயிலுக்குக் கூட தமிழ் பெயர் வைக்க மறுக்கிறது. இந்தியில், சமஸ்கிருத்திலும் தான் பெயர் வைக்கிறது. தமிழகத்தில் இயக்கப்படும் ரயிலுக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் என ஏன் பெயர் வைக்க வேண்டும்? நல்லத் தமிழ் பெயர் கிடைக்கவில்லையா? எல்லாத்துறையிலும் தமிழைப்புறக்கணிப்பது. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் வாய்ப்பு கிடைக்கிற எல்லா இடங்களிலும் திணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள பாஜகவின் மாநில தலைவராக உள்ள அண்ணாமலை, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமிழை வைத்து வியாபாரம் நடத்துவதாகச் சொல்வதை எப்படி ஏற்க முடியும்? இது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் இருக்கிற அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், எதிர்கட்சியினர் தமிழ் மக்களின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழ் மொழியை வளர்க்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம். தமிழ் ஆட்சி, நீதிமன்ற மொழியாக வரவேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். குறிப்பாக, மொழிப்பிரச்சினையில், அரசியல் சட்டத்தையே இன்றைய நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இதற்கு அடிப்படை ஊற்றுக்கண்ணாக இருப்பது அரசியல் சட்டத்தில் உள்ள மொழிப்பிரிவு தான். அதைத் திருத்த அண்ணாமலை ஒத்துக் கொள்வாரா? அதைச் செய்யாமல் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமிழை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறார்கள் என்று ஒரு மாநில தலைவர் பேசுவது அவரின் அரசியல் பக்குவமின்மையைக் காட்டுகிறது.

Related Stories

No stories found.