`உதயநிதியின் துணை இருப்பதால் பெரிய சிரமம் இருக்காது'– அமைச்சர் சாமிநாதன்

`உதயநிதியின் துணை இருப்பதால் பெரிய சிரமம் இருக்காது'– அமைச்சர் சாமிநாதன்

``சினிமாத்துறையில் இருந்து அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை இருப்பதால் எனக்கு மிகவும் சிரமமாக இருக்காது" என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 25 வருடத்திற்கு மேலாக உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவானது சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார். மேலும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கலைஞானம், ஆர்.கே.சுரேஷ், ஆர்.பி.சவுத்ரி, தேனாண்டாள் முரளி, நடிகர் ராதாரவி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலைப்புலி எஸ் தாணு பேசுகையில், "அதிகபட்சமாக ஒரு பத்து தயாரிப்பாளர்கள் மட்டுமே நல்ல நிலைமையில் உள்ளனர். மற்றவர்கள் அனைவரும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். இதை நான் அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறேன். அரசு நிச்சயம் நமக்கு உதவி செய்யும்" என்றார்.

நடிகர் ராதாரவி பேசுகையில், "இந்த விழாவிற்கு வருவதாக அமைச்சர் உடனே ஒப்புக்கொண்டார் என்று சொன்னார்கள். கலைஞர் கலையுலகை சார்ந்தவர். அதனால் அவர் வழி வந்த அவர் நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டது பெரிய ஆச்சரியம் இல்லை. இந்த ஆட்சி நமக்கான ஆட்சி. இந்த சான்றிதழ்களுக்கு பதில் மெடல்களை வழங்கினால் நல்லாயிருக்கும். ஏனென்றால் சான்றிதழ்களை மாட்ட சுவரில்லை பலருக்கு. ஆனால் கழுத்து எல்லோருக்கும் இருக்கிறது. இளைஞர்களுக்கு ஒரு அறிவுரை. தாய், தந்தையரை தயவு செய்து முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள்" என்றார்.

அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், "தமிழ் திரைப்படங்களில் ஏறத்தாழ 25 வருடத்திற்கும் மேலாக பயணித்ததெல்லாம் பெரிய சாதனை தான். இந்த துறையில் முதல்வர் என்னை பணியமர்த்திய போது, என்னிடம் சினிமா தயாரிப்பாளர்கள் பற்றி நிறைய சொல்வார். உங்கள் குறைகளை கேட்க நான் இருக்கிறேன். நான் ஒரு விவசாயக் குடும்பத்தை சார்ந்தவன். அந்த கஷ்டத்தை போலதான் சினிமாவும். அந்த கஷ்டத்தை நான் உணர்கிறேன்.

ஏற்கெனவே தொழில் மிகவும் பின்தங்கி இருக்கின்ற நிலையில், கரோனா பெரிய இடையூராக இருந்தது. கரோனாவில் மிகவும் பின் தங்கிய தொழில் சினிமா. சங்கத்தில் நிதி இல்லை என்று சொன்னார்கள். இந்த அரசு நிச்சயம் உதவி செய்யும். சினிமாத்துறையில் இருந்து அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை இருப்பதால் எனக்கு மிகவும் சிரமமாக இருக்காது. நீங்கள் சொல்லும் கோரிக்கைகள் எனக்கு கஷ்டமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம் உதயநிதி இந்த துறை என்பதால் சிரமம் குறையும். 2016 முதல் 2021 வரை நிலுவையில் உள்ள சிறந்த கலைஞர்களுக்கான நிலுவையில் உள்ள விருதுகளை நிச்சயம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், "தயாரிப்பாளர்கள் சங்கம் வைத்த கோரிக்கைகள் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். சிறப்புக் காட்சிக்கு அனுமதிப்பது தொடர்பாக முன்னணி நடிகர்கள் தரப்பில் இருந்து யாரும் இதுவரை கோரிக்கைகள் வைக்காததால் அதை பற்றி இன்னும் அறிவிப்பு எதும் இல்லை. மேலும் அப்படி கோரிக்கை வைத்தால் நிச்சயம் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும்" என்றார்.

டிக்கெட் விலையை குறைப்பது தொடர்பான கேள்விக்கு, ஆன்லைன் பதிவுகளில் ஏற்படுத்தக்கூடிய செயல்முறை மற்ற மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டு வெற்றி கண்டப்பிறகு பரிசோதனை செய்யப்பட்டு நடைமுறை செய்யப்படும் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in