பஞ்சாப் தேர்தலில் முதல்வர் முகம் இன்றி களமிறங்கும் காங்கிரஸ்
நவ்ஜோத் சிங் சித்து உடன் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் தேர்தலில் முதல்வர் முகம் இன்றி களமிறங்கும் காங்கிரஸ்

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், முதல்வராக எவரையும் முன்னிறுத்தாது களம் காண முடிவு செய்திருக்கிறது ஆளும் காங்கிரஸ் கட்சி.

சில மாதங்களில் நெருங்கும் 5 மாநில தேர்தலில் அங்கமாக பஞ்சாப் மாநிலமும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் மாநில காங்கிரஸின் கோஷ்டி மோதலை தவிர்க்கவும், ஜாதி ஓட்டுக்களை சிதறாது அள்ளவும், முதல்வராக எவரையும் முன்னிறுத்தாது களம் காண முடிவு செய்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ் கட்சிக்கே உரிய கோஷ்டி மோதல்களும், குடும்ப வாரிசுகளின் அதிகாரமும் பஞ்சாப் காங்கிரஸிலும் உண்டு. முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், கலகக்காரர் நவ்ஜோத் சிங்குக்கும் இடையிலான குடுமிப்பிடியில், முன்னவர் கட்சியை விட்டே வெளியேறினார். தனிக்கட்சி ஆரம்பித்திருப்பதோடு, பாஜகவுடன் சேர்ந்து, காங்கிரஸ் கட்சியுடன் பலப் பிரயோகத்துக்கும் தயாராகிறார். இதன் வரிசையில் இன்னும் புகைந்துகொண்டிருக்கும் இதர கோஷ்டி மோதல்களை அடக்கி வைக்க, அனைவரையும் அரவணைத்து செல்லும் போக்கை காங்கிரஸ் விரும்புகிறது.

அதுபோலவே வாரிசுகள் ஆதிக்கம் அதிகம் என்பதால், பஞ்சாப் காங்கிரசில் ’ஒரு குடும்பம் ஒரு சீட்டு’ என்ற சீரிய திட்டத்தையும் மாநில காங்கிரஸ் இந்த சட்டமன்ற தேர்தலில் நடைமுறைப்படுத்துகிறது. மேலும், அனைத்து சாதியினருக்கும் சம வாய்ப்பு தரவேண்டியும், தற்போதைக்கு எவரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறது.

செப்டம்பர் முதல் முதல்வராக இருக்கும் சரண்ஜித் சிங் சன்னி தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்ற போதும் இதர பெரும்பான்மை சமூக மக்களிடையே செல்வாக்கு இல்லாதவர். மாநில காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத் சிங் சித்து பெரும்பான்மை சீக்கிய ஜாட் சமூகத்தை சேர்ந்தவர். துணை முதல்வர்களிலும் சீக்கிய ஜாட் மற்றும் இந்து மதத்தினருக்கு சரி பாதியாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை, இந்த சாதி சமநிலையை முன்னிறுத்தியே பிரச்சாரங்களில் ஈடுபட காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது.

இதற்கிடையே அமரிந்தர் சிங்+பாஜக கூட்டணி மற்றும் ஆம் ஆத்மி கட்சி என எதிர்க்கட்சிகள், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான போட்டியை களத்தில் தர உள்ளன. ஆட்சியை தக்க வைப்பது மட்டுமன்றி, கட்சி மேலும் உடையாது காப்பதும் காங்கிரஸின் பிரதான கவலையாக இருக்கிறது. அதன் போருட்டும் முதல்வர் முகமாக எந்த தனி நபரையும் நிறுத்தாது, கட்சி மற்றும் ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேர்க்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in