
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டை ஒட்டி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொடுக்கப் பட்டுள்ள பத்திரிகை விளம்பரத்தில் காமராஜரின் படம் இடம் பெறாததற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டை ஒட்டி தமிழகத்தில் இன்று சில பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெருந்தலைவர் காமராஜரின் படம் இடம் பெறவில்லை. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் இதற்கு தங்கள் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
'பெருந்தலைவர் கு.காமராஜர் ஐயாவை மறந்தால் மாநிலம் மட்டுமல்ல மத்தியிலும் ஆட்சிக்கு வரமுடியாது. இரு பிரதமர்களை உருவாக்கிய கல்விக்கண் திறந்த காமராஜர் படத்தை போடாதது கண்டனத்துக்குரிய செயலாகும். இப்படிப்பட்ட செயலால் தமிழகத்தில் கொஞ்சம் காங்கிரஸ் கட்சி மிச்சம் இருக்கும் தென்மாவட்ட பகுதிகளான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான நாடார்களை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பது போல் உள்ளது.
எனவே இந்த விளம்பரத்தைப் போல இன்னும் ஒரு விளம்பரத்தை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை பெருந்தலைவர் காமராஜர் படத்தை போட்டு வெளியிட வேண்டும். இல்லையேல் அந்த ஆண்டவனாலும் உங்களை காப்பாற்ற முடியாது' என்ற கருத்தும், இதே போன்ற தொனியில் வேறு பல பதிவுகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.