நடத்துநர் வேலை, கிளீனர் வேலை வாங்கி தருவதாக கூறி காசு வாங்கி சாதாரண மக்களிடம் ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி நேற்று தூத்துக்குடி மச்சாது நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ஒரே நாடு ஒரே தேர்தல் 2024 ஆம் ஆண்டு வருவதற்கு வாய்ப்பில்லை. இதனால் நேர விரயம், பணம் விரயம் வரும். பல மாநிலங்களில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தேர்தல் வருவதால் திட்டங்கள் பாதிக்கப்படுகிறது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய குந்தகம் விளைகிறது. அமைச்சர்கள், ராணுவம் உள்ளிட்ட பலரின் பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என அவர் தெரிவித்தார்.
மேலும், “பாரதிய ஜனதா கட்சியில் செந்தில் பாலாஜி போன்றவர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. நடத்துநர் வேலை, கிளீனர் வேலை வாங்கி தருவதாக கூறி காசு வாங்கி சாதாரண மக்களிடம் ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி. நாடு எரிசக்தி துறையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டு, 2030 க்குள் 500 மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்க வேண்டும் என்ற வேட்கையோடு எதிர்பார்ப்போடு இருக்கிறார். ஆனால் செந்தில் பாலாஜி மின்சாரம் தயாரிக்க அப்ளிகேஷன் கொடுக்க வந்த ஒருவரிடம் ரூபாய் 20 லட்சம் லஞ்சம் பெற்றவர். இவரை பாஜகவிற்கு வாங்க என அழைப்பது நம்பும்படியாகவா உள்ளது” என்றார்.