
``ஸ்மார்ட் மீட்டருக்கு எந்த விதத்திலும் மாதாந்திர கட்டணம் நிச்சயம் வசூலிக்கப்பட மாட்டாது'' என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
சென்னை அருகே மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான மாதிரி ஜோதி (சுடர்) கொண்டு செல்லும் விழிப்புணர்வு பேரணி கரூரில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, "வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி அதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆனால் ஸ்மார்ட் மீட்டருக்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படாது என்று உறுதியாக கூறுகிறேன்.
தமிழகத்தில் 2.37 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். இதில் 1 கோடி பேருக்கு எந்தவித கட்டண மாற்றமோ, ஏற்றமோ, இல்லை. 101 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரையிலான 63.35 லட்சம் நுகர்வோர்களுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.27.50 என இரு மாதங்களுக்கு ரூ.55 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு ஒரு ரூபாயைவிட குறைவு. எந்தவித பாதிப்பும் இல்லாமல் தமிழகத்தில் மின் கட்டணம் சீரமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் 1.59 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதற்கு ஆண்டுக்கு வட்டி மட்டும் 16,500 கோடி. நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியம் இழுத்து மூடும் நிலையில் இருந்தது. அதற்காகத்தான் மின் கட்டண சீரமைப்பு செய்யப்பட்டது. இல்லாவிட்டால் மத்திய அரசு மானியம், வங்கி கடன் ஆகியவை பெற முடியாத நிலை உள்ளது.
அதிமுக ஆட்சியில் 2012, 2013, 2014 என மூன்று முறை 37 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், இன்றைக்கு தங்கள் ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்ற பொய்யான, தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இப்போது மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கடந்த 2011-ல் ரூ.410க்கு விற்பனையான சமையல் எரிவாயு தற்போது ரூ.1,120க்கு விற்கப்படுவதை எதிர்த்தும், 100க்கும் மேல் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எதிர்த்தும் போராட்டம் நடத்தியிருக்கலாமே. அதற்கு திராணியற்றவர்கள் மின் கட்டண உயர்வை மட்டும் எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர்" என்று காட்டமாக கூறினார்.