மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட தகுதியான நபர்கள் கிடைக்காமல் அதிமுக திணறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. திமுக தரப்பில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு தொகுதிப் பங்கிட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதிமுக தரப்பில் கூட்டணிக்காக தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேபோல பாஜகவும் தங்களுடன் கூட்டணிக்கு புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்துள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை கரூர் தொகுதி காங்கிரசுக்கு வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு காங்கிரசுக்கு வழங்கப்பட்டால் மீண்டும் ஜோதிமணியே களமிறங்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
அதிமுக தரப்பில் கடந்த முறை அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை போட்டுயிட்டு தோல்வியடைந்தார். அந்தத் தொகுதியில் பல முறை வெற்றி பெற்றவரான அவருக்கு உடனடியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக வழங்கியது. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அவர் இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் சின்னசாமி, வேடசந்தூர் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம், கரூர் மேற்கு ஒன்றிய செயலர் கமலக்கண்ணன் உட்பட சிலர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சின்னசாமி வலுவான வேட்பாளர் என்றாலும் பொருளாதார நிலைமை காரணமாக, அவருக்கு மீண்டும் சீட் வழங்க தலைமை தயக்கம் காட்டுகிறது.
வலுவான கூட்டணி இல்லாததால், முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் போட்டியிட விரும்பவில்லை எனக்கூறி பின்வாங்கியுள்ளார். கரூர் தாண்டி புறநகர் மற்றும் கிராமங்களில் போதுமான அளவுக்கு அறிமுகம் இல்லாதவர் என்பதால், கமலகண்ணனை போட்டியிட வைக்க தலைமை அச்சப்படுகிறது.
அதனால் தகுதியான வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியாமல் அதிமுக திணறி வருவதாக கூறப்படுகிறது. வேறு வழி இல்லாமல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரையே போட்டியிடச் சொல்லி, தலைமை நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவரோ, மாநில அரசியலை விட்டு மத்திய அரசியலுக்கு செல்ல மறுத்து விட்டார். இருந்தபோதும், 'நீங்கள் தான் நிற்க வேண்டும்' எனச் சொல்லி கட்சி தலைமை அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதற்கு அவர், தொடர்ந்து மறுத்து வருவதால், வேறு வலுவான வேட்பாளர் கிடைக்காமல், தலைமை திணறி வருகிறது
கரூர் தொகுதியில், அதிமுக ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது. 1989, 1998, 2009, 2014 ஆகிய தேர்தலில் தம்பிதுரையும், 1999-ல் முன்னாள் அமைச்சர் சின்னசாமியும் வெற்றி பெற்றனர். இப்படி அதிமுகவுக்கு தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட, வலிமையான வேட்பாளர் கிடைக்காமல் அதிமுக திணறி வருவது அக்கட்சியினரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.