குரல் மாதிரி பரிசோதனைக்கு பிடிஆர் ஏன் தயங்க வேண்டும்? - அண்ணாமலை பேட்டி

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் கர்நாடக அரசியலிலும் பேசப்படும் நபராகி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் நிலவரம், அதிமுகவுடனான கூட்டணி உள்ளிட்டவை குறித்து கர்நாடக தேர்தல் களத்தில் இருந்த அண்ணாமலையிடம் அலைபேசி வழியே பேசினோம்.

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை

கர்நாடக தேர்தல் களம் காங்கிரஸுக்குச் சாதகமாக உள்ளதாக கருத்துக்கணிப்புகள் சொல்கிறதே..?

கர்நாடக தேர்தல் களம் பாஜகவுக்கு மிகுந்த சாதகமாக உள்ளது. காரணம், 9 ஆண்டுகள் பாரதப் பிரதமரின் ஆட்சி மூன்றாரை ஆண்டுகள் பாஜகவின் ஆட்சி. இரண்டுமே மக்கள் மனதில் பாஜக நமக்கு மீண்டும் தேவை; மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி இருக்க வேண்டும் என்ற மனநிலையை உண்டாக்கி இருக்கிறது.

கர்நாடகாவில் உள்கட்டமைப்புத் தொடங்கி அனைத்தையும் அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். அதனால் நிச்சயமாக பாஜக மீண்டும் அங்கே ஆட்சி அமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலின் போது கூடக் காங்கிரஸ் தான் ஆட்சிக்கு வரும் எனக் கருத்துகணிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால், நடந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியும். மக்கள் நிச்சயம் எங்கள் பக்கம்தான் உள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும்.

தமிழக அரசியல் களத்திற்கும் கர்நாடக அரசியல் களத்திற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள் ?

கர்நாடகாவில் தேர்தல் காலம் என்பதால் சற்று சூடாக உள்ளது ஆனால், தமிழக அரசியல் களம் வருடத்தில் 365 நாட்களுமே சூடாகத்தான் இருக்கிறது. தமிழக அரசியல் களத்தில் கண்ணியமில்லை என நான் நினைக்கிறேன். தமிழக அரசியலில் தனிப்பட்ட தாக்குதல் அதிகம் நிறைந்துள்ளது. கர்நாடகாவைப் பொறுத்தவரை தலைவர்களுக்குள் அரசியல் ரீதியாகக் கருத்து முரண்கள் இருந்தாலுமே குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்த விமர்சனங்களை அவர்கள் வைப்பது இல்லை. தமிழக அரசியலுக்கும் கர்நாடக அரசியலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

தமிழகத்தில் ஆடியோ அரசியல் தான் பாஜகவின் அடுத்த தேர்தலுக்கான வியூகமா..?

அப்படியெல்லாம் இல்லை. ஒருவரை மிரட்டி பாஜகவை வளர்க்க வேண்டியதில்லை. அது எங்களின் வியூகமும் கிடையாது. திமுக தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் உண்மை முகத்தை தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் தமிழகப் பாஜக உள்ளது. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். பொய் அறிக்கையை விடுவதைத் தவிர்த்து குரல் மாதிரி பரிசோதனைக்கு அமைச்சர் வர வேண்டும். அதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வி.

திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாகச் சொல்லிவிட்டு சொத்துப் பட்டியலை வெளியிட்டு ஏமாற்றுகிறார் அண்ணாமலை என சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் முன்வைப்படுகிறதே?

ஒன்றை மட்டும் நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் வெளியிட்டது ஊழல் பட்டியல் தான். ஊழல் செய்ததால் தான் இன்றைக்கு திமுக தலைவர் தொடங்கி குடும்ப உறுப்பினர்கள், திமுகவின் முக்கியப் புள்ளிகள் இவ்வளவு சொத்துக்களைச் சேர்க்க முடிந்தது. சாதராண நிலையில் இருந்த எ.வ.வேலு, போன்றவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துகள் வந்தது என்பதை என்னை விமர்சனம் செய்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் திமுகத் தலைவர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினர் தலையீடு உள்ளது என்று கூறினேன். வருமான வரிச் சோதனையின் மூலம் தற்போது எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்னும் நிறைய ஊழல் வெளி வரும்; பொறுத்திருந்து பாருங்கள்.

அதிமுகத் தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை உங்கள் மீது வைத்தார்கள். ஆனால் தற்போது, எங்களுக்குள் தகராறு ஏதும் இல்லை என்கிறார்களே..?

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள். அதுபோலத்தான் இதுவும். மாநிலத் தலைவராக என்னுடைய கட்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவையும் பொறுப்பும் எனக்கு உள்ளது. அதை நோக்கித்தான் நான் பயணிக்க முடியும். நாம் எந்தப் பாதையில் போனாலும் அதில் பாஜகவின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அதற்காகத்தான் தலைவராக இருக்கிறேன்.

அகில இந்திய தலைவர்கள் எனக்கு அளித்த பொறுப்பைச் சரியாகச் செய்ய வேண்டும். தலைவராக இந்தக் கட்சியை வளர்த்து கொடுத்துவிட்டு செல்வதுதான் என்னுடைய கடமை. எங்கள் கட்சியைப் பொறுத்தவரை ’பாஸ்’ என்பதெல்லாம் இல்லை அனைவருமே தொண்டர்கள் தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து அடங்கி இருக்கும் நிலையில், தேர்தலில் இரண்டு கட்சி தொண்டர்களையும் ஒருங்கிணைக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

மோடி அவர்களை மீண்டும் பாரத பிரதமராக்க வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய தேவையுள்ளது. அதனால் நிச்சயம் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையாக உழைப்பாளர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இன்னும் காலமும் நேரமும் இருக்கிறது. இப்போதைக்கு கர்நாடக தேர்தலில் எங்களின் முழுக் கவனமும் உள்ளது. அது முடிந்த பிறகு தமிழக அரசியல் களத்திற்கு வருவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in