
“மீண்டும் அதிமுகவில் சசிகலாவைச் சேர்க்க வாய்ப்பே இல்லை. அது முடிந்துபோன விஷயம் அதைப் பற்றி திரும்பத் திரும்ப கேட்க வேண்டாம்” என்று செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் நடைமுறைகள் நடந்துவருகின்றன. அதன் ஒரு கட்டமாக சேலம் புறநகர் மாவட்டத்தில் உட்கட்சி தேர்தல் பணிகளை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை. அது முடிந்து போன விஷயம். அது பற்றி திரும்பத் திரும்ப கேட்க வேண்டாம். சசிகலா பற்றி ஓபிஎஸ் சொன்னது அவருடைய தனிப்பட்ட கருத்து. சசிகலா மீது தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. சசிகலா விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், பொது பிரச்சினையாகவும்தான் வேறுபாடு உள்ளது” என்றார்.
மேலும், “தமிழக முதல்வரின் அரசுமுறை ரீதியிலான துபாய் பயணம் முதலீட்டுக்கான பயணமா அல்லது அவர்களது குடும்பப் பயணமா எனப் பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதிமுக உட்கட்சித் தேர்தல் முடிந்த பிறகு திமுகவைக் கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறுவதற்கான அறிவிப்புகள் வெளியாகும்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பைத் கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும்.
ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணை நடந்துவருகிறது. அது குறித்து தனிப்பட்ட முறையில் கருத்து எதுவும் சொல்ல இயலாது" என்றார் எடப்பாடி பழனிசாமி.