‘அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை... நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடை...ஆனால்?: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 ‘அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை... நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடை...ஆனால்?: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் இதில் யாருக்கேனும் தடையோ அல்லது நிவாரணமோ தேவைப்பட்டால் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.

ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து நடத்தக்கூடாது என உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஈபிஎஸ் தரப்புக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளதால் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது உள்ளது என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒருநபர் அமர்வுதான் முடிவெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டதாக எங்கள் மீது ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. ஒரு கட்சியின் விவகாரத்தில் குறிப்பிட்ட எல்லை வரைதான் உயர்நீதிமன்றம் செயல்பட முடியும், ஆனால் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எல்லை மீறி நடந்துகொண்டதாக ஈபிஎஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், கட்சி விதிகளுக்கு எதிராக யாரேனும் நடந்தால் நீதிமன்றம் தலையிட முடியும் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்படுகிறது.

ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. ஜூன் 23-ம் தேதியே பொதுக்குழு முடிந்துவிட்ட நிலையில் தற்போது முறையீடு செய்வது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், அதிமுக பொருளாளர் ஓபிஎஸ் ஒத்துழைப்பு தராததால் கட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈபிஎஸ் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாளர் ஓபிஎஸ் கையெழுத்திடாததால் பணியாளர்களுக்கு ஊதியம் தர இயலவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவை ஓபிஎஸ் இழந்துவிட்டதாக ஈபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in