`பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு குற்றத்தின் பின்னாலும் திமுக இருக்கிறது'

விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
`பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு குற்றத்தின் பின்னாலும் திமுக இருக்கிறது'

"தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குற்றத்தின் பின்னாலும் ஒரு திமுககாரன் இருக்கிறான்" என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார்.

விருதுநகரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 22 வயது பெண் 8 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கி மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது:-

``இந்தியாவிலே எந்தப் பெண்ணுக்கு எந்தக் கொடுமை நடந்தாலும் நம்முடைய அரசியல்வாதிகள் அதைப்பற்றிப் பேசுவார்கள். நம்முடைய விருதுநகரில் பட்டியலினத்தில் பிறந்த ஒரு சகோதரிக்கு நடந்திருக்கும் கோரமான, அவலமான, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் உலுக்குகிற சம்பவம் பற்றி பேசுவதற்கு எந்தத் திராணியும் இல்லாத ஒரு ஆளுங்கட்சி இங்கே இருக்கிறது. ஆளுங்கட்சியின் மகளிரணி தலைவி கனிமொழி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பட்டியலின சகோதரிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்று. 2 நிமிடத்தில் அவர் போட்ட பதிவை அவரே நீக்கிவிட்டு, பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அப்படித்தான் தமிழ்நாட்டின் அரசியல் இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த இந்த 10 மாதத்தில் தினந்தோறும் நாங்கள் சொல்லிக்கொண்டிருப்பது, பெண்களின் பாதுகாப்புக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத அரசாக இந்த அரசு மாறிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான். ஒவ்வொரு நாளும் பத்திரிகையில் நாம் படிக்கிற செய்தி, அதற்கு முந்தைய நாள் நாம் படித்த செய்தியைவிட கோரமாக, அவலமாக இருக்கிறது. நடக்கக் கூடிய ஒவ்வொரு குற்றச் செயலிலும் ஏதோ ஒரு வகையில் ஒரு திமுககாரன் சம்பந்தப்பட்டிருக்கிறான். விருதுநகர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சகோதரி 10 மாதமாக இந்தக் குற்றங்களைப் பொறுத்துக்கொண்டிருந்திருக்கிறாள் என்றால், சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளியே உள்ளூர் திமுக பொறுப்பாளராக இருந்ததால்தான். இந்தச் சூழலில் அந்தப் பெண் எப்படி காவல்நிலையத்தில் போய் புகார் கொடுக்க முடியும்? இதைத்தான் நம்முடைய முதல்வர் மூடி மறைக்கிறார். டெல்லியில் நிர்பயா கேஸ் நடந்தபோது, இதுமாதிரி சம்பவங்கள் எல்லாம் வடமாநிலத்தில் நடக்கலாம், தமிழ்நாட்டில் நடந்தது கிடையாது, நடக்கவிடமாட்டோம் என்றோம். இப்போது அதே சம்பவம் வேலூரில் நடந்திருப்பது, தமிழர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. நண்பருடன் சினிமாவுக்குச் சென்ற அந்த சகோதரியை ஆட்டோக்காரர் உள்ளிட்டோர் கடத்தி 4 மணி நேரம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்தப் பெண் பெயர் குறிப்பிடாமல், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இமெயில் செய்திருக்கிறார். காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, ரோட்டில் 3 பேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். எதற்கு சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டபோது, அந்தப் பெண்ணை நாங்கள் பாலியல் வல்லுறவு செய்துவிட்டு, உடன் வந்த நண்பரை மிரட்டி அவரிடம் இருந்து 40 ஆயிரம் பணத்தைப் பறித்துக்கொண்டோம். அந்தப் பணத்தை எப்படிப் பிரித்துக்கொள்வது என்று சண்டை போடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் காவல்துறைக்கே விஷயம் தெரிகிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று. அவ்வளவு மெத்தனம்.

விருதுநகரையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் பிரச்சாரத்துக்கு வந்தபோது காவல்துறையின் குறிக்கோளாக எது இருந்தது என்றால், பாஜககாரர்கள் எங்கும் கொடி கட்டக்கூடாது, கொடி பிடிக்கக்கூடாது, எங்கேயும் ஓட்டுக்கேட்டுப் போகக்கூடாது என்பதாகத்தான் இருந்தது. ஏனென்றால் காவல்துறைக்கு திமுக பிறப்பித்த உத்தரவு அதுதான். ஏனென்றால் 2 அமைச்சர்களைக் கொண்ட மாவட்டம் இது. அந்த 2 பேருக்கும் ஒரே வேலை, காவல்துறையைத் தூண்டிவிட்டு பாஜகவினரை நசுக்குவதுதான். அப்படி காவல்துறைக்கு எந்தச் சுதந்திரத்தையும் கொடுக்காதபோது, எப்படி காவல்துறை இங்குள்ள 22 வயது பெண்ணுக்கு நியாயத்தைக் கொடுக்க முடியும்? இந்த ஒரு பிரச்சினையில் நீங்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடலாம். ஆனால், தமிழ்நாட்டில் நடக்கிற எல்லா பிரச்சினையிலும் பெண்களுக்கு நாம் கொடுக்க வேண்டியது நம்பிக்கை தானே ஒழிய, சிபிசிஐடி விசாரணை கிடையாது. நம்முடைய காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். அதற்கு சுதந்திரமாக காவல்துறையை செயல்பட விடவேண்டும்.

காவல்துறையை சீரமைக்க ஓர் ஆணையத்தை முதல்வர் அமைக்கிறார். அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைவராக அறிவிக்கப்படுகிறார். ஆனால், அண்மையில் சென்னை அசோக் நகரில் அவர் சென்ற வாகனத்தை மறித்துத் தகராறு செய்த நபர்கள் அவருடைய பாதுகாவலரையே அரிவாளால் வெட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இப்படித்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது.

ஜம்மு - காஷ்மீரில் ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுத்த கனிமொழி, தனது தொகுதிக்குப் பக்கத்தில் இருக்கும் விருதுநகரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிப் பட்டும்படாமலும் பேசுகிறார். தமிழக முதல்வரின் கவனம் எல்லாம் துபாயில்தான் இருக்கிறது. இன்றைக்கு அவர் துபாய் செல்கிறார். ஏற்கெனவே அவரது மகன் உள்ளிட்டோர் துபாய் சென்றுவந்தனர். இன்றைக்கும் முதல்வருடன் குடும்பத்தினர் செல்கின்றனர். அவர் எதற்காக அடிக்கடி துபாய் செல்கிறார் என்ற மர்மம் பற்றிய உண்மைகள் வெளிவர வேண்டும்.

பாஜக இன்றைக்கு இங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதால் நாளையே தமிழகத்தில் ஆட்சி மாறிவிடப்போவதில்லை. ஆனால், தமிழகத்தில் பாஜக மட்டும்தான் அரசியலுக்காக, தேர்தலுக்காக மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் நியாயத்துக்காக, உரிமைக்காகக் குரல் கொடுக்கும் என்பதை நிரூபிக்கவே இந்தப் போராட்டம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in