நக்மாவுக்கு ஏன் சீட் கொடுக்கப்படவில்லை?- ப.சிதம்பரம் சொல்லும் காரணம் இதுதான்

நக்மாவுக்கு ஏன் சீட் கொடுக்கப்படவில்லை?- ப.சிதம்பரம் சொல்லும் காரணம் இதுதான்

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காகக் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

கார்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற சிபிஐ ரெய்டு குறித்துப் பேசிய ப.சிதம்பரம், “புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை பற்றியெல்லாம் நான் புதிதாகக் கருத்துச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்னால் ஷாருக்கானின் மகன் வழக்கு எந்த நிலையில் முடிந்தது என்று உங்களுக்குத் தெரியும். இதுகுறித்து ஜார்க்கன்ட் முதல்வர் குற்றம்சாட்டி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் அதிரஞ்சன் சௌத்ரி மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். இதையெல்லாம் வைத்து கொண்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். சாதாரண மக்களெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். நான் காங்கிரஸ் கட்சியைப் பிரதிபலிக்கும் மனிதர். காங்கிரஸ் கட்சியினுடைய குரலை அழுத்தமான முறையிலே சொல்லி வருபவன். காங்கிரஸ் கட்சியினுடைய கொள்கையைப் பார்த்து பாஜவினர் அஞ்சுகிறார்கள்” என்றார்.

மேலும் வேட்பாளர் பட்டியலில் நக்மா இடம் பெறாதது குறித்துப் பேசிய அவர், “ இந்தியாவில் என்னைவிட தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியில் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் குறைந்த அளவு மட்டுமே சீட்டுகள் இருக்கின்றன. நான் வேட்பாளர் தேர்வுக் குழுவில் இல்லை. இப்படியிருக்க என்னைத் தேர்ந்தெடுத்தது பற்றி நான் எப்படி கருத்துச் சொல்லமுடியும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in