சென்னை வேட்பாளர்கள் குஷி... வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடக்கம்!

சென்னை வேட்பாளர்கள் குஷி... வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடக்கம்!

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல்

மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என 3 தொகுதிகள் உள்ளன. இதில் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் மொத்தம் 39 லட்சத்து 25 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி, வரும் மக்களவைத் தேர்தலில் வடசென்னையில் 35 வேட்பாளா்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அதற்காக வாக்குப்பதிவு இயந்திரம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதற்குத் தேவையான 11 ஆயிரத்து 843 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4 ஆயிரத்து 469 கட்டுப்பாட்டு கருவிகளும், 4 ஆயிரத்து 852 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத்தணிக்கை சோதனை கருவிகளும் (விவி பேட்) சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு மையத்தில் இருந்து 16 சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு மையத்திற்கு தேவைக்கேற்ப ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேட்பாளர் இறுதிபட்டியல் வெளியிட்டபின், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தக்கூடிய வாக்காளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளது. எனவே, வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி இன்று(ஏப்.10) வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஏப். 18-ம் தேதி மாலை எந்த வாக்குப்பதிவு இயந்திரம் எந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையில் கொண்டு செல்லப்படும். வாக்குப்பதிவிற்காக அன்று இரவே வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை தயார்படுத்துவார்கள் என்று தேர்தல் அலுவலர்கள் கூறியுள்ளனர்.அதற்கு அடுத்த நாள் காலை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in