நடுவானில் விமானத்தில் நடித்துக் காட்டிய பெண்; பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்: வைரலாகும் வீடியோ

நடுவானில் விமானத்தில் நடித்துக் காட்டிய பெண்; பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்: வைரலாகும் வீடியோ

1990-ம் ஆண்டு திமுக பிரசாரக் கூட்டத்தில் தான் நடித்த நாடகத்தை நடுவானில் விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் முன் பெண் ஒருவர் நடித்துக் காட்டும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணத்தைத் தொடங்கி வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று விமானத்தில் சென்றார். அவருடன் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு எம்.பி, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது முதல்வர் முன் வந்து நின்ற பெண், தான் ஒரு வங்கி மேலாளர் என்றும், தனது பெயர் கௌசல்யா என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதைக்கேட்ட முதல்வர், சொல்லுங்கள் என்ன வேண்டும் எனக் கேட்டார்.

அதற்கு அந்தப் பெண், 1990-ம் ஆண்டுகளில் சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் நடந்த திமுக பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த நாடகத்தில் தான் நடித்ததாக கூறினார். அந்த வசனத்தை உங்கள் முன் பேசி நடித்துக் காட்ட விரும்புவதாக முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டார். அதற்கு முதல்வரும் ஒப்புதல் அளித்தார்.

அப்போது அந்தப் பெண், தான் சிறுவயதில் பேசிய வசனங்களை அடிமாறாமல் அடுக்கடுக்காக பேசினார்,. அத்துடன் வசனத்தின் இறுதியில் தரணி போற்றும் அளவிற்கு தமிழ் நாட்டை வழிநடத்திச் செல்லும் தமிழக முதல்வர் எங்கள் ஸ்டாலின் எனப் புகழ்ந்தார். அவர் பேசிய வசனத்தை முதல்வர் ஸ்டாலின் ஆர்வத்துடன் ரசித்ததுடன், அவரின் பேச்சாற்றலைக் கண்டு வியந்து கைகொடுத்துப் பாராட்டினார்.

தமிழக முதல்வர் பாராட்டியதால் அந்தப் பெண் மகிழ்ச்சியில் திளைத்தார். இதை விமானத்தில் அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in