3 மணிநேரம் போராடி ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முனைவர் பட்டதாரி!

கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் ஒரு மாண்புமிகு பெண் வாக்காளர்
3 மணிநேரம் போராடி ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முனைவர் பட்டதாரி!
போராடிப் பெற்ற வாக்கு ‘மை’

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டில்பாடு மீனவக் கிராமத்தில் பெண் ஒருவர் 3 மணிநேரம் இடைவிடாமல் போராடி, காவல் துறை, வாக்குச்சாவடி அதிகாரிகள் என அனைவரிடமும் வாதிட்டு தனது வாக்குரிமையை நிறைவேற்றிய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம். குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு, கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இங்கு வாக்களிக்க ஆன்ஸி மோள் என்னும் பெண் வந்திருந்தார். இவர், இதற்கு முன்பு கடந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இதே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்திருந்தார்.

இந்நிலையில், இன்று வாக்களிக்க வந்தவர் முதலில் வாக்குச்சாவடி மையத்தின் அருகில் பூத் சிலிப் விநியோகித்துக் கொண்டிருந்தவர்களிடம் போய், தன் பூத் சிலிப்பைக் கேட்டார். ஆனால், அவருக்கு அங்கு வாக்கு இல்லை என முகவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்தவர், கடந்த தேர்தல்களில் இங்குதான் வாக்களித்ததாக முறையிடவே, வாக்குச்சாவடி மையத்துக்குள் இருக்கும் அதிகாரிகளிடம் கேட்குமாறு அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து ஆன்ஸி மோள் தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்துக்குள் சென்று தன் வாக்கு, கொட்டில்பாடு கிராமத்தில் இருக்கும் ஆவணத்தை தன் செல்போனில் ஸ்கிரீன் ஷாட் எடுத்தார். அதை எடுத்துக்கொண்டு வாக்குச்சாவடி மையத்தில் நீண்டவரிசையில் காத்திருந்தார். வாக்குச்சாவடி அலுவலர்களிடம் இதைப்பற்றி முறையிட்டபோது, அவரது வாக்கு இந்த வாக்குச்சாவடி மையத்தில் இல்லை என சொல்லி திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். உடனே ஆன்ஸி மோள், முந்தையத் தேர்தல்களில் தான் இங்குதான் வாக்களித்ததை மீண்டும் சொன்னதோடு, தன் செல்போனில் ஸ்கிரீன் ஷாட் எடுத்துவைத்த ஆவணத்தையும் காட்டினார்.

அதற்குப் பின் நடந்தவைகளை ஆன்ஸி மோள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். “மீனவ கிராமம் என்பதால், எனக்கு போதிய கல்வியறிவு இல்லாமல் வந்திருப்பதாக அலுவலர்கள் தங்களுக்குள் கற்பனை செய்துகொண்டனர். வாக்குச்சாவடி மையமே தெரியாமல் வந்திருப்பதாக ஒருகட்டத்தில் தங்களுக்குள் ஏளனமாகப் பேசிக்கொள்ளவும் தொடங்கினர்.

தேர்தல் ஆணையத்தில் எனது வாக்குச்சீட்டு வரிசை எண் 264 என இருந்தது. ஆனால், தேர்தல் அலுவலர்கள், முகவர்கள் கையில் இருந்த பட்டியலில் 264-ம் எண்ணில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. அதனாலேயே என்னை வாக்களிக்க விடவில்லை. அங்குதான் என் வாக்கு இருக்கிறது என்னும் என் தரப்பு நியாயம் எடுபடவே இல்லை. அதிகாரிகளோ, எனக்கு போதிய கல்வியறிவு இல்லாமல் வந்திருக்கிறேன் என்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர்.

இதனிடையே தேர்தல் அலுவலராக இருந்த ஒரு பெண், என் அப்பாவுக்கும், எனக்கும் வேறு, வேறு பூத்களில் வாக்கு இருந்தது. உங்களுக்கும் அப்படி இருக்கக்கூடும். உங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் இங்கே வாக்களித்திருக்கலாம். ஆனால், உங்கள் வாக்கு பக்கத்து வாக்குச்சாவடி மையத்தில் இருக்கும் என அவராகவே முடிவுக்கு வந்து வெளியேறச் சொன்னார். நான் அப்போதும், இங்கேதான் என் 18 வயதில் இருந்தே வாக்களித்துவருகிறேன் எனச் சொன்னேன். ஒருகட்டத்தில் என் குரல் எடுபடாமல் அங்கிருந்து வெளியேறினேன்.

வாக்காளர் முனைவர் ஆன்ஸி மோள்
வாக்காளர் முனைவர் ஆன்ஸி மோள்

ஆனாலும், வாக்களிக்காமல் வீட்டுக்கு செல்லக் கூடாது என அங்கிருந்த காவல் துறையினரிடம் முறையிட்டேன். ஆனால் அவர்களோ உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து, “ஓட்டு இல்லாத ஒரு பெண், ஓட்டுப்போட கேட்டு வந்திருக்கிறார்” என தகவல் கொடுத்தனர். இரண்டரை மணிநேரத்துக்கும் மேல் இப்படியே கடந்த நிலையில், அதே வாக்குச்சாவடி மையத்தில் வேறு ஒரு இடத்தில் வரிசை எண் 659-ல் என் பெயர் இருந்தது. ஆனால், புகைப்படத்தில் எனக்கு முதல்முறை வாக்குரிமை கிடைத்தபோது எடுத்த புகைப்படம் இருந்தது. அதனால், அது நான் இல்லை என்னும் முடிவுக்கு வந்திருந்ததாலேயே, இவ்வளவு பெரிய காத்திருப்புக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

சமவெளிப் பகுதியில் ஒரு பெண் இப்படி வந்து முறையிட்டால், கொஞ்சம் சிரத்தை எடுத்து அவர் பெயர் பட்டியலில் இருக்கிறதா என தேடவேணும் செய்வார்கள். அதே கடற்கரை கிராமம் என்பதால், அவர்கள் இந்தப் பெண்ணுக்கு எதுவும் தெரியாது என்னும் முடிவிலேயே இப்படி நடத்தினர். நான் வாக்களித்து முடிக்கும்வரை என்னைப் பற்றியோ, என் கல்வித்தகுதி பற்றியோ சொல்லிக்கொள்ளவே இல்லை. என் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முழுதாக 3 மணிநேரம் தனியொரு பெண்ணாக போராட வேண்டியிருந்தது’’ என்று சொல்லும் ஆன்ஸிமோள், முனைவர் பட்டம் பெற்றவர். தனியார் கல்லூரி ஒன்றில் துறைத் தலைவராக உள்ளார்.

வாக்காளர்களே நல்லாட்சியின் எஜமானர்கள்! 3 மணி நேரம் போராடி தன் வாக்குரிமையை நிலைநாட்டிய மாண்புமிகு வாக்காளர் ஆன்ஸி மோள் போன்றவர்களே அதன் அச்சாணி என்றே சொல்லிவிடலாம்!

Related Stories

No stories found.