கூட்டத்தில் குறையைச் சொன்ன பெண்: `வாயை மூடு' என ஒருமையில் பேசிய அமைச்சர் பொன்முடி!

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

`எங்கள் பகுதி குறையாக இருக்கிறது' என்று கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் கூறிய நிலையில், `குறையாக இருக்கிறதா? வாயை மூடு' என்று அமைச்சர் பொன்முடி ஒருமையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டில் புதிதாக 25.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழாவிற்கு வந்த தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினருமான பொன்முடி, பூங்காவை திறந்துவைத்து, பின்னர், முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, ''கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக சென்னையாக இருந்தாலும் சரி, திருக்கோவிலூராக இருந்தாலும் சரி, விழுப்புரமாக இருந்தாலும் சரி வளர்ச்சி அடைந்து வருகிறது'' என பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், ''எங்கள் பகுதி குறையாக இருக்கிறது'' என தெரிவித்தார். இதனால் கோபமடைந்த பொன்முடி, ''குறையாக இருக்கிறதா? வாயை மூடு'' என ஒருமையில் பேசினார்.

மேலும், அந்தப் பெண்ணிடம், ''உன் வீட்டுக்காரர் வந்திருக்கிறாரா'' எனக் கேட்க, அதற்கு அந்தப் பெண், ''அவர் போய் சேர்ந்துட்டாரு'' என்று சொல்ல, ''நல்ல வேளை அவர் போய் சேர்ந்துட்டார்'' என நக்கலகாக அமைச்சர் பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர், அங்கிருந்த நிர்வாகிகள் அந்தப் பெண்ணை அமைதிப்படுத்தினர். இதையடுத்து பேச ஆரம்பித்த பொன்முடி, ''நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என எனக்குத் தெரிகிறது. ஆயிரம் ரூபாய் எப்போது தருவீர்கள் என்பது தானே. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வருகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட அருங்குறுக்கை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, ''நீங்களெல்லாம் அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சீட்டிங்க'' என பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in