தடுப்பூசி தேவையை நிறைவு செய்வதில் பிரதமர் அக்கறை காட்ட வேண்டும்!

உலக கோவிட்-19 மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரையை முன்வைத்து ரவிக்குமார் எம்.பி ஆலோசனை
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கோவிட் 19 தொடர்பான உலக மாநாட்டில் பிரதமர் மோடி, செப்.22-ல் உரையாற்றி இருக்கிறார். கரோனா தடுப்புக்காக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அதில் பெருமையோடு பேசியிருக்கிறார். ஒரேநாளில் இரண்டரை கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதை அங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார். அது தனது ‘பிறந்த நாள் பரிசு’ என்பதை ஏனோ அவர் கூறவில்லை. ஒட்டுமொத்தமாக இதுவரை 20 கோடி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை சாதனையாக அங்கே கூறியிருக்கிறார்.

சுமார் 150 நாடுகளுக்குத் தடுப்பூசிகளையும் இதர மருத்துவ உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ததையும், வளரும் நாடுகள் பலவற்றுக்குத் தடுப்பூசி தந்து உதவியதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாயாரப் புகழ்ந்திருக்கும் பிரதமர், உலக நாடுகள் மற்ற நாடுகளின் தடுப்பூசிச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதியில் ஈடுபடப்போவதாகவும், அதற்கு ஏதுவாக தடுப்பூசிக்கான கச்சாப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உலக நாடுகள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பிரதமரின் உரையை 3 பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு நாம் ஆராய வேண்டும்.

முதல் அம்சம், இங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பானது. இந்தியாவில் 20 கோடி பேருக்கு முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் அதைச் சாதனையாகச் சொல்ல முடியுமா?

நிச்சயமாக அதை ஒரு சாதனையாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், தொற்று அபாயம் அதிகம் உள்ள பிரிவினரான 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் 14.3 கோடியாகும். அவர்கள் அனைவருக்கும் இதுவரையில் 2 டோஸ் தடுப்பூசி போடப்படவில்லை. இந்தியாவிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை 94 கோடியாகும். அதில் 20 கோடி பேருக்கு 2 டோஸ் என்பது 21% மட்டுமே ஆகும். அது, பெருமைப்பட்டுக் கொள்வதற்குப் பதிலாக கவலைப்பட வேண்டிய எண்ணிக்கை என்பதைப் பிரதமர் உணராதது நமது துரதிர்ஷ்டம் .

பிரதமர் பேசியதில் 2-வது அம்சம், மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதியை ஆரம்பிக்கப்போகிறோம் என்பதாகும். நம் நாட்டு மக்களுக்கான தடுப்பூசி தேவை நிறைவு செய்யப்படாத நிலையில், ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவோம் என்று பிரதமர் சொல்லியிருப்பது, தடுப்பூசி நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டித் தருவதற்கு மட்டுமே உதவும். நமது நாட்டில் 50 சதவீத மக்களுக்குக்கூட 2 டோஸ் தடுப்பூசி போடப்படாத நிலையில், தடுப்பூசி ஏற்றுமதியை அனுமதிப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.

பிரதமர் பேசியதில் கவனிக்க வேண்டிய 3-வது அம்சம், நமது நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அயல் நாடுகளில் அனுமதிப்பது தொடர்பானது. தற்போது பிரிட்டனில் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டும் அங்கீகாரம் அளித்துள்ளனர். எனினும் பிரிட்டன் அரசு இந்தியாவிலிருந்து வருபவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தளர்த்தவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி பிரிட்டனின் அஸ்ட்ரா ஸெனேக்கா நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்புதான். அதை அங்கீகரிக்கவே பிரிட்டன் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டது. அப்படி அங்கீகாரம் அளித்த பின்பும் பிரிட்டனுக்குச் செல்பவர்களைத் தடுப்பூசி போடாதவர்களாகவே அந்த அரசு நடத்துவது நியாயமல்ல.

ஒன்றிய அரசின் அங்கீகாரத்தோடு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு, இதுவரை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கவில்லை. எதிர்வரும் அக்டோபர் 5-ம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்தில், அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும் என இப்போது தெரியவந்துள்ளது.

இதனிடையில், டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசி ஒன்றுக்கு ஒன்றிய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது. 3 டோஸ் போட வேண்டிய Zycov-D என்னும் அந்தத் தடுப்பூசி, 67 சதவீதம் மட்டுமே தடுப்புத் திறன் கொண்டது என்று சொல்லப்படுகிறது. அதற்கு அவசர அவசரமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டதைப் பற்றியும் இப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. கோவாக்சின் போல, இதிலும் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுவிடக் கூடாது.

மாநாட்டில் பேசியதோடு கடமை முடிந்தது எனக் கருதாமல், இந்திய தடுப்பூசிகளுக்கு உலக நாடுகளின் ஒப்புதலைப் பெற பிரதமர் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அமெரிக்க அதிபரைப் புகழ்ந்தால் மட்டும் போதாது. தனது நாட்டின் தடுப்பூசித் தேவையை நிறைவுசெய்வதில் அவர் காட்டும் அக்கறையை நமது பிரதமரும் காட்ட வேண்டும்.

இப்போது புதிய தொற்றின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 31 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது. இது, 2020 ஜூலை 2-வது வாரத்தில் இருந்த நிலையாகும். கரோனாவை முற்றாகக் கட்டுப்படுத்த நாம் வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது என்பதையே இது காட்டுகிறது. இதைப் பிரதமர் புரிந்துகொண்டால் நல்லது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in