தேசிய அரசியலை நோக்கி வேகமெடுக்கும் ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம்!

தேசிய அரசியலை நோக்கி வேகமெடுக்கும் ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம்!
ஓவியம்: வெங்கி

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை திறப்பு விழா நடத்தியதன் மூலம் அகில இந்திய அளவில் தன்னை முன்னிறுத்தும் மற்றொரு முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இவ்விழாவுக்கு குறிப்பாக அகிலேஷ் யாதவை அழைத்திருப்பதன் மூலம் காங்கிரசுக்கான ஒரு மறைமுக எச்சரிக்கையையும் அவர் விடுத்திருப்பதாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.  

இந்தியா கூட்டணி தலைவர்கள்...
இந்தியா கூட்டணி தலைவர்கள்...

இதில் காங்கிரசுக்கு எச்சரிக்கை விட என்ன இருக்கிறது என்று கேட்பவர்கள் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வேண்டியிருக்கும். ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங் போபர்ஸ் பீரங்கி கொள்முதலில் நடந்த ஊழல் குறித்து தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தார். அதனால் காங்கிரஸ் தலைமையிடம் அவருக்கு அதிருப்தி உருவாகி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனையடுத்து தன்னுடைய எம்பி பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸை விட்டு வெளியேறி ஜனதா தளத்தை தொடங்கினார் வி.பி.சிங்.   

அடுத்துவந்த மக்களவைத் தேர்தலில் வி.பி.சிங்கிற்கு இந்தியா முழுவதும் பெரும் ஆதரவு கிடைத்தது. திமுக, தெலுங்குதேசம், அசாம் கணபரிஷத் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றன. முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பிடித்தது.  திமுக சார்பில் முரசொலி மாறன் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார். 

இதை நினைவுகூரும் வகையில் வி.பி.சிங் சிலை திறப்புவிழா நாளில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் வெளியான கட்டுரையில் ‘அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு எதிராக முதன் முதலில் உருவான பலமான மாற்று அணி என்றால் அது 1988-ல் உருவான  தேசிய முன்னணி தான். அதன் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர்  கலைஞர்’ என்று  குறிப்பிடப்பட்டது.

வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில்...
வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில்...

இந்த ஃபிளாஷ் பேக்கை முரசொலி இப்போது எதற்காக எடுத்துப்போட வேண்டும் என்பதுதான் இப்போது காங்கிரஸாருக்குள் இருக்கும் வெளிக்காட்ட முடியாத கோபம். காங்கிரசின் வீழ்ச்சிக்கு முதல் காரணமாக இருந்தவருக்கு இந்தியாவில் எங்குமே சிலை இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் திமுக அதனை முன்னெடுத்திருப்பது காங்கிரஸாருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்டமைக்கும் இந்தியா கூட்டணிக்கு எதிராக பிடிஏ கூட்டணியை உருவாக்க நினைக்கும் அகிலேஷ் யாதவ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதையும் காங்கிரஸ் அவ்வளவாய் ரசிக்கவில்லை. 

காங்கிரசுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு எட்டப்படாமல் கருத்து மோதல் வெடித்தது. அதனால் அங்கு மட்டுமல்லாமல் உபியிலும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் அகிலேஷ்.  இப்படி காங்கிரசுக்கு எதிராக கொடிபிடித்துக் கிளம்பி இருக்கும் அகிலேஷ் யாதவை வி.பி.சிங் சிலை திறப்பு விழாவுக்கு திமுக அழைத்ததன் உள் நோக்கம் என்ன என்பதுதான் இப்போது காங்கிரஸார் மத்தியில் பிரதான கேள்வியாக எதிரொலிக்கிறது. 

ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய இடத்தை கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு பலமாக எதிரொலிக்கும் நிலையில் காங்கிரசோடு இணைந்து பயணிப்பதில் இந்தியா கூட்டணியில் இருக்கும் பல தலைவர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதை உள்வாங்கி இருக்கும் ஸ்டாலின், காங்கிரஸ் அல்லாத பிற எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் வேலைகளை தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.  

காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டால் அந்தக் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் சிதறிவிடாமல் இருக்க ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சியில்  ஸ்டாலின் இருக்கிறார். அதனால் தான், ஏற்கெனவே இத்தகையை முயற்சியில் இறங்கிவிட்ட அகிலேஷ் யாதவுடன் கைகோத்திருக்கிறார் என்கிறார்கள்.

ஒருவேளை, காங்கிரஸை ஏற்றுக்கொள்ளாத மாநில கட்சிகள் எல்லாம் ஒரு கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் உருவானால் பிரதமருக்கான ரேஸிலும் ஸ்டாலின் இருப்பார். அது முடியாதபட்சத்தில் துணைப் பிரதமராகும் வாய்ப்பாவது அவருக்கு அமையலாம். அப்படி அவர் தேசிய அரசியலை நோக்கி நகரும் பட்சத்தில் இங்கு அவரது மகன் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுவதையும் யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்கமாட்டார்கள். 

”வரலாற்றில் குப்தர்கள் காலம், மௌரியர்கள் காலம், மொகலாயர்கள் காலம், சோழர் காலம், பல்லவர் காலம் என்ற வரிசையில் எதிர்கால வரலாற்றில் மு.க.ஸ்டாலின் காலமும் நிச்சயம் இடம்பெறும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் அவரது கரங்கள், டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று திமுக எம்பி-யான திருச்சி சிவா பேசியிருப்பதும் இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது.

வி.பி.சிங்குடன் கருணாநிதி
வி.பி.சிங்குடன் கருணாநிதி

தேசிய அரசியலில் திமுக பங்காற்றுவது ஒன்றும் புதிதல்ல. 1969-ல் ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது,  25 எம்பி-க்களை தன்வசம் வைத்திருந்த திமுக, இந்திரா காந்திக்கு ஆதரவளித்தது. 1969-ல் குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரா காந்தியால் நிறுத்தப்பட்ட வேட்பாளரை ஆதரித்தது திமுக. அதேபோல் 1988-ல் தேசிய முன்னணியை கட்டமைக்கவும், மத்தியில் அதை ஆட்சியில் அமர்த்தவும் திமுக பெரும்பங்கு வகித்தது.  1998-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை மத்திய அரசில் முக்கியப் பங்கு திமுகவுக்கு இருந்தது. 

1999-ல் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக அரசு, வாஜ்பாய் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது. இதனால் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. ஆனாலும் 1999 தேர்தலில் மீண்டும் பிரதமராக வந்தார் வாஜ்பாய். அப்போது அவருக்கு ஆதரவளித்த கருணாநிதி, 5 ஆண்டு கால பாஜக ஆட்சிக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். இப்படி மத்தியில் நிலையான அரசு அமைய பல நேரங்களில் திமுக முக்கியப் பங்கு வகித்துள்ளது. 

இப்போது தனது தந்தை வழியில் ஸ்டாலினும் தேசிய அரசியலில் கவனம் செலுத்திவருகிறார். பாஜகவுக்கு எதிரான அவரது கருத்துகள் இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் சப் டைட்டிலோடு பகிரப்பட்டு வருகிறது.  முதல்வராக பொறுப்பேற்றதும் சட்டசபையில் பேசிய ஸ்டாலின், “இந்தியா என்பது மாநிலங்களால் ஆன ஒன்றியம்” என்றார். அந்தப் பேச்சு தேசிய அளவில் இணையம் முழுக்க பரவி விவாதங்களை ஏற்படுத்தியது. திமுக முன்னெடுக்கும் சமூக நீதி அரசியலும் தேசிய அளவில் இப்போது கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

திமுகவின் தேசிய அரசியல் நகர்வு குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “சமூக நீதியைக் காப்பதற்காக வி.பி. சிங் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தபோது அதை வரவேற்று உறுதியாக இருந்த தலைவர்கள் உத்தரப் பிரதேசத்தின் முலாயம்சிங் யாதவும் பீகாரின் லல்லுபிரசாத் யாதவும். அவர்கள் இருவருமே ஜே.பியின் இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர்கள்.  அந்த அடையாளத்திற்காகவும், அந்த  மரியாதைக்காகவும்தான் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவுக்கு முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் அழைக்கப்பட்டார்.   

மற்றபடி இதற்கும் தேசிய அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க வி.பி.சிங்குக்கு மரியாதை செலுத்தும் ஒரு நிகழ்வு மட்டுமே.  அதேசமயம், திமுக தேசிய அரசியலுக்குள் எப்போதும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்குப் பின்னால் நீங்கள் கூறுவதுபோல வேறு எந்த அரசியல் காரணங்களும் இல்லை. பிரதமர் பதவியை நோக்கி ஸ்டாலின் பயணம்  என்கிற கேள்விக்கு தலைவர் கலைஞர் சொன்ன பதிலையே முதல்வரும் கூறியுள்ளார். ‘எங்கள் உயரம் எங்களுக்குத் தெரியும்’ என்பதுதான் எப்போதும் அவரது பதில்” என்றார் அவர். 

இவர் இப்படிச் சொன்னாலும் தேசிய அரசியலை நோக்கிய ஸ்டாலினின் பயணம் தெளிவான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய துணைப் பிரதமர் என்ற கனவு வந்திருக்கிறது” என்று  விமர்சித்திருப்பதைக் கவனித்தால் ஸ்டாலினின் தேசிய அரசியல் பயணத்தின் வீரியத்தை உணரமுடியும்! 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in