மொத்தமே 1,200 வாக்குதான்; இயந்திரம் காட்டியது 2,177: 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்

வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது எனத் தகவல்
மொத்தமே 1,200 வாக்குதான்; இயந்திரம் காட்டியது 2,177: 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்
மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டடில் இருப்பை விட அதிக வாக்குகள் பகல் 12 மணிக்கு காட்டியதால், இயந்திர பழுதென 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டு, செம்பாக்கத்தில் உள்ள அட்வென்ட் பள்ளி வாக்குச்சாவடியில், அறை எண் 240-ல் காலை 11 மணி நிலவரப்படி 216 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 1 மணி நேரம் கழித்து மொத்த வாக்குகளை சோதித்ததில், 2,177 வாக்குகள் பதிவானதாக வாக்குப்பதிவு இயந்திரம் காட்டியது. மொத்தமாகவே 1,200 வாக்குகள் மட்டுமே உள்ள நிலையில், 2,177 வாக்குகள் பதிவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை அடுத்து இயந்திரப் பழுதைச் சுட்டிக்காட்டி அதிமுக, திமுக கட்சி வேட்பாளர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேர்தல் அலுவலர் இயந்திரக் கோளாறே இதற்கு காரணம் என்று தெரிவித்ததும், 2 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

உடனடியாக புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு வேட்பாளர்கள் முன்னிலையில் சரி பார்க்கப்பட்ட பின், மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் வாக்குப்பதிவு மையத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக வாக்களிக்க இயலாமல் வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் சாந்தகுமார், “தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டில் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் போட்டியிடுகின்றோம். திடீரென வாக்கு இயந்திரத்தில் அதிகபடியான வாக்குகள் காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் முதலில் கோளாறான வாக்கு இயந்திரத்தில் இருந்து வாக்குச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்று 12 வேட்பாளர்கள் ஒப்புகொண்ட நிலையில், திமுக வேட்பாளர் மட்டும் எண்ணிகைக்கு ஒத்துக்கொள்ளாதது சந்தேகப்படும் வகையில் உள்ளது” என்றார்.

தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தமிழ்நாடு முழுதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகி உள்ளது.

வேட்பாளர்கள் மரணமடைந்த காரணத்தால் 6 இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை. வாக்குச்சாவடிகளில் ஏற்படும் பிரச்சினைகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என கூறினார்.

இருப்பினும், எக்காரணத்தைக் கொண்டும் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என்றே தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.