மிக பக்கத்தில் நெருங்கி விட்டோம்: அதிமுக இணைவது குறித்து சசிகலா பேட்டி

 அண்ணா நினைவிடத்தில் சசிகலா.
அண்ணா நினைவிடத்தில் சசிகலா.அதிமுக ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது - சசிகலா பேட்டி

அதிமுக ஒன்றிணைவதற்கு மிக பக்கத்தில் நெருங்கி விட்டோம். தனித்தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லது இல்லை. ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று தான் என்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை சொல்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 54-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி  சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா மலர்வளையம் வைத்து இன்று மரியாதை செலுத்தினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ புரட்சித் தலைவரும், அம்மாவும் கருணாநிதியும், திமுகவும் தீயசக்தி என்று சொன்னார்கள். அதை மனதில் வைத்தே நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற வார்த்தையைத் தான் இப்போதும் சொல்கிறேன். எப்போதும் சொல்கிறேன்.

அதிமுக ஒன்றிணைவதற்கு மிகப் பக்கத்தில் நெருங்கி விட்டோம் தனித்தனியாக இருந்தால் அதிமுகவிற்கு  நல்லது இல்லை. ஒன்றிணைந்து செயல்படுவோம். நாம் ஒன்றிணையும் சூழல் வந்துவிட்டது என்பது எனக்கு தெரிகிறது. உங்களுக்கு தெரியவில்லை எனக்குத் தெரிகிறது” என்றார்.

இடைத்தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து பேசிய சசிகலா, “என்னுடைய நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”கடலில் பேனா நினைவுச்சின்னம் வைப்பதை நான் எதிர்க்கிறேன். அதற்குக் காரணம் கடலுக்குள் அதை அமைப்பது மீனவர்களைப் பாதிக்கும். காவல் துறைக்கும் சவாலாக இருக்கும் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்திகிறேன். அப்படி நினைவுச் சின்னம் வைக்க வேண்டும் என்று  ஆசை இருந்தால் கருணாநிதியின் சமாதியில்  நினைவுச் சின்னத்தை வைக்கலாம்.

இத்தனை அடி உயரத்தில் தான் வைக்க வேண்டும் என்பது கணக்கில்லை . தமிழ்நாட்டின் நிதி நிலையைப் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்றார்போல் தான் திட்டங்களை செய்ய வேண்டும். மக்களுக்கு பயன்படும் திட்டங்களை எல்லாம் நிறுத்தி வைக்கிறார்கள். கேட்டால், நிதி இல்லை அதற்கு ஏற்றார்போல்தான் திட்டங்களை செய்ய முடியும்  என்கிறார்கள்.

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி இருக்கிறார்கள் அதற்கு நிதி  இல்லை என்கிறார்கள். பேனா நினைவுச்சின்னம் வைப்பதற்கு மட்டும் 87 கோடி நிதி  எங்கிருந்து வருகிறது?’’ என்று சசிகலா கேள்வி எழுப்பினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in