`நளினியை உச்சநீதிமன்றமே விடுதலை செய்யலாம்'- தமிழக அரசு பதில் மனுத் தாக்கல்!

`நளினியை உச்சநீதிமன்றமே விடுதலை செய்யலாம்'- தமிழக அரசு பதில் மனுத் தாக்கல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இந்த மசோதாவை மத்திய அரசுக்கு அப்போது இருந்த ஆளுநர் அனுப்பி வைத்தார். ஆனால் மத்திய அரசு 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டதோடு தமிழக ஆளுநராக இருந்தவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. இந்நிலையில் பேரறிவாளன் போன்று தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 7 பேர் விடுதலையில் குடியரசுத் தலைவர் எந்த முடிவு எடுக்காமல் இருக்கிறார் என்றும் பேரறிவாளனை ஏற்கெனவே நீதிமன்றமே விடுதலை செய்ததுபோல் இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்றும் தெரிந்துள்ளது. தமிழக அரசு இப்படி கூறி இருக்கும் நிலையில் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் விரைவில் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in