
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் அறிக்கை சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி உள்ளது.
அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுக்கு தமிழக பாஜகவின் ஆதரவு, அவரது வெற்றிக்கு பாடுபடுவோம் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் எனவும், ஓ.பன்னீர் செல்வம் பெயரருக்கும் முன்னால் எந்தவிதமான பொறுப்பும் குறிப்பிடாமல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவில் தற்போது வரை இரட்டைத் தலைமைத்தான் தொடர்கிறது. இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்விளைவாகத்தான் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் அனுப்பிய ஒப்புதல் கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி பெயருக்கும் முன்பாக எந்த பொறுப்பும் குறிப்பிடாமல் இருந்தனர்.
ஆனால் அண்ணாமலை, இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை சர்ச்சையாகியுள்ளது. இது ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அண்ணாமலைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.