ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் சிக்கிய இருவர்

ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் சிக்கிய இருவர்

திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவின் சந்தேக வளையத்தில் தற்போது இருவர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012 மார்ச் 29-ல் நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டையே பரபரப்பாக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து முதலில் திருச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், வேறு சில விசாரணைப் பிரிவுகளுக்கும் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ராமஜெயத்தின் சகோதரரான ரவிச்சந்திரன், இந்த வழக்கை தமிழக போலீஸாரே விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த வழக்கை விசாரிக்க எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிபதி வி.பாரதிதாசன் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.

அந்த குழுவினர் நீதிமன்றத்தில் தங்கள் விசாரணை அறிக்கையை இரண்டு முறை தாக்கல் செய்து மேலும் இந்த வழக்கில் அவகாசம் வேண்டும் என்று கோரியிருந்தனர். அது வழங்கப்பட்டிருந்த நிலையில் தங்கள் விசாரணையை தொடர்ந்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் தற்போது இரண்டு பேரை போலீஸார் தங்கள் இறுதி கட்ட விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேசன், புதுக்கோட்டை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் சென்னையைச் சேர்ந்த எம்எல்ஏ பாலன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்ற நிலையில் ராமஜெயம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சிறப்பு புலனாய்வு போலீஸார் ராமஜெயம் கொலை குறித்து இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in