ஆம் ஆத்மி முஸ்லிம் வேட்பாளரின் வெற்றி ரகசியம்

வரலாறு சொல்லும் மலேர்கோட்லா தொகுதி
ஆம் ஆத்மி முஸ்லிம் வேட்பாளரின் வெற்றி ரகசியம்

பஞ்சாப்பில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க உள்ளது. இங்கு முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் உள்ள 117 தொகுதியில் 92 இல் முன்னணி வகிக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 18 தொகுதிகளில் முன்னணி வகித்து வருகிறது. சிரோமணி அகாலி தளம் கூட்டணி 4 இடங்களிலும், பாஜக கூட்டணி வெறும் ஒரு தொகுதியிலும் முன்னணி வகிக்கின்றன.

பஞ்சாப் தேர்தலில் மற்ற மாநிலங்களை போல் முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்யப்படுவதில்லை. இதற்கு முஸ்லிம்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பது தான் காரணம். முஸ்லிம்கள் அதிகமுள்ள ஒரே சட்டப்பேரவை தொகுதியான மலேர்கோட்லாவில் அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியது. இதிலும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப்பில் ஒரே கட்டமாக 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20ல் தேர்தல் நடைபெற்றது. இங்கு பாஜக தலைமையில் முதன்முறையாக கூட்டணி அமைக்கப்பட்டது. எனினும், பஞ்சாப்பில் முஸ்லிம்கள் மீதான அரசியலை எந்த அரசியல் கட்சிகளும் செய்வது கிடையாது. இந்த மாநிலத்தில் 35 சதவீதமாக இருந்த முஸ்லிம்கள் சுதந்திரத்திற்கு முன்பான பிரிவினையில் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். இருப்பினும், மலேர்கோட்லாவில் மட்டும் முஸ்லிம்களை இடம்பெயர சீக்கியர்கள் அனுமதிக்கவில்லை. இதன் பின்னணியில் வரலாறு இடம் பெற்றுள்ளது.

பஞ்சாப்பின் மலேர்கோட்லா பகுதி, கடந்த 1454ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சியாளரான ஷேக் சத்ரூத்தீன்-எ-ஜஹான் என்பவரால் உருவானது. இது, 1657ல் பயாசித் கான் என்பவரால் தனி மாகாணமாக அமைக்கப்பட்டது. அப்போது சீக்கியர்களின் 10வது குருவான கோவிந்த்சிங்கின் 9 வயது மகனான ஜோரோவார்சிங்கும், 7 வயது மகனான ஃபதேசிங் ஆகியோரின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இந்த இரண்டு சீக்கிய மதகுருவின் வாரிசுகளைக் கொல்ல மலேர்கோட்லாவின் ஆளுநரான சிரிஹிந்த் வஜீர்கான் 1705ல் உத்தரவிட்டார்.

இதற்கு, மலேர்கோட்லாவின் நவாபாக அப்போது இருந்த ஷேர் முகம்மது கான் எதிர்ப்பு தெரிவித்தார். இவ்வாறு கொல்வது இஸ்லாத்திற்கும், அவர்களது புனிதக் குர்ஆன் கொள்கைக்கும் எதிரானது எனக் காரணமும் கூறி இருந்தார். தான் உயிருடன் இருக்கும் வரை குரு கோவிந்த்சிங்கின் சீக்கிய வாரிசுகளை மலேர்கோட்லாவின் நவாபான முகம்மது கான் காத்தார். இதன் நன்றிக்கடனாக, பாகிஸ்தான் பிரிவினையின் கலவரத்தில் மலேர்கோட்லாவின் முஸ்லிம்களை சீக்கியர்கள் காத்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் பிரிவினையின் போது பஞ்சாப் முழுவதிலும் கலவரம் வெடித்தது. இதில், மலேர்கோட்லா மட்டும் பஞ்சாப்பில் அமைதியாக இருந்தது. மலேர்கோட்லாவை தவிர்த்து பஞ்சாப்பின் மற்ற பகுதிகளின் முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டனர். இதனால், மலேர்கோட்லாவிற்கு வெளியே இல்லாத முஸ்லிம்கள் மீதான அரசியலை எந்த கட்சியினரும் செய்வதில்லை.

சுமார் 80 சதவீதம் கொண்ட மலேர்கோட்லாவில் மட்டும் கிராமப் பஞ்சாயத்து முதல் சட்டப்பேரவை தேர்தல் வரை அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களையே நிறுத்துகின்றன. 1957 முதல் மலேர்கோட்லாவின் எம்எல்ஏக்களாக முஸ்லிம்களே உள்ளனர். இந்தமுறையும் அனைத்துக் கட்சியிலும் முஸ்லிம்களே வேட்பாளராக களமிறங்கினர். பாஜக மட்டும் முஸ்லிம் வேட்பாளரை இங்கு நிறுத்தவில்லை. அந்த கட்சி தனது முக்கியக் கூட்டணியான கேப்டன் அம்ரீந்தர்சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸுக்கு இதை ஒதுக்கியது. ஆம் ஆத்மி கட்சியில் முகம்மது ஜமீலுர் ரஹ்மான் போட்டியிட்டார். இதில் ஆம் ஆத்மி கட்சியின் ஜமீலூர் ரஹ்மானின் வெற்றி பெற்றார். இவருக்கு 23,791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இதன் அடுத்த நிலையில் காங்கிரஸின் வேட்பாளரான ரஸியா சுல்தானாவிற்கு 44,262 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் மாநில அமைச்சரான ரஸியாவின் கணவர் முகம்மது முஸ்தபா பஞ்சாப்பின் முன்னாள் டிஜிபி ஆவார். இவர், காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவின் அரசியல் ஆலோசகராக உள்ளார். மலேர்கோட்லாவில், பிப்ரவரி 20ல் இங்கு 72.8 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

காதியானி முஸ்லிம்கள்?

பஞ்சாப்பில் முஸ்லிம்களின் அஹமதியான் எனும் காதியானி பிரிவினர் வாழும் மற்றொரு தாலுகாவாக காதியான் உள்ளது. குருதாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்த காதியானிகளை தம் மதத்தினர் என முஸ்லிம்கள் ஏற்பதில்லை. இவர்களது மசூதிகளில் தொழுகைக்கான அஸான் எனும் பாங்கு ஒலியை அளிப்பதும் தண்டனைக்குரியதாகப் பாகிஸ்தானின் சட்டத்தில் உள்ளது. இதற்கு முஸ்லிம்களின் கொள்கையின்படி தன் கடைசி இறைத்தூதர் நபிகள் நாயகம் தான் என்பதை காதியானிகள் ஏற்காததுதான் காரணம். இவர்கள், காதியானில் 1835ல் பிறந்து தன் பிரிவை ஏற்படுத்திய மீர் குலாம் அகமதுவை கடைசி தூதராகக் கொள்கின்றனர். இங்கு காதியானிகள் பாதிக்கும் குறைவாகவே உள்ளதால் அவர்கள் தேர்தல்களில் போட்டியிட்டும் வெற்றி கிடைப்பதில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in