`ஆர்எஸ்எஸ் சொல்லியிருக்கும் காரணம் அபத்தமானது'- டிஜிபியிடம் மனு அளித்த திருமாவளவன் பேட்டி

`ஆர்எஸ்எஸ் சொல்லியிருக்கும் காரணம் அபத்தமானது'- டிஜிபியிடம் மனு அளித்த திருமாவளவன் பேட்டி

"காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி நடக்க இருந்த பேரணிக்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் சொல்லியிருக்கும் காரணம் அபத்தமானது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

அக்டோபர் 2-ம் தேதி நடத்தப்படும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி டிஜிபி சைலேந்திர பாபுவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று நேரில் மனு அளித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ``ஆர்எஸ்எஸ் இயக்கம் அக்டோபர் 2-ம் தேதி நடந்த இருக்கிற அணிவகுப்புக்கு அவர்கள் சொல்லியிருக்கிற காரணம் மிகவும் அபத்தமாக இருக்கிறது. 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடப் போகிறோம் என்று அக்டோபர் இரண்டை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 15-ல் கொண்டாட முடியவில்லை என்றால் ஆகஸ்ட் மாதத்தில் ஏதேனும் ஒரு தேதியில் அவர்கள் கொண்டாடியிருக்கலாம். ஆனால் அவர்கள் காந்தி பிறந்த நாளை தேர்வு செய்திருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது. இரண்டாவது அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம் என்று சொல்கிறார்கள். இதுவும் மிகவும் ஆபத்தமான ஒன்று. அம்பேத்கரின் 130-வது பிறந்தநாள் கொண்டாடபட்டுவிட்டது. நூற்றாண்டுகள் கொண்டாடப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது அவர்கள் நூற்றாண்டை கொண்டாட போகிறோம் என்று சொல்கிறார்கள்.

மூன்றாவது அன்றைக்கு விஜயதசமியை கொண்டாட போகிறோம் என்கிறார்கள். அக்டோபர் 5-ம் தேதி தான் விஜயதசமி. எனவே அவர்கள் அக்டோபர் 5-ம் தேதியில் கொண்டாடி இருக்கலாம். ஆக இந்த மூன்று காரணங்களும் உள்நோக்கத்துடன் அவர்கள் தேர்வு செய்து இருக்கிறார்கள். காந்தியை இழிவுபடுத்த வேண்டும், அவரை ஓரங்கட்ட வேண்டும், அதை வைத்து இங்கு அரசியல் செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் ஒரு தொலைநோக்கு நோக்கோடு, ஆபத்தான செயல் திட்டத்தோடு, மக்கள் விரோத செயல் திட்டத்தோடு களமிறங்கிறார்கள் என்பதையும் தலைமை காவல்துறை இயக்குநர் இடத்திலே நாங்கள் விளக்கி இருக்கிறோம்.

அவர்களுக்கு தடை விதித்தது 100 விழுக்காடு பொருந்தும். மேலும் இது இரு அமைப்புகளுக்கு இடையிலான சவாலாக பார்க்க வேண்டாம். அரசுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே இருக்கும் சவாலாக இதை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் கொண்டவர்கள் இந்த மண்ணில் மதவெறிக்கு இடம் தராமல் சமூக நீதி அரசியலை உயர்த்திக் பிடிப்பதற்கு அவர்கள் பாடுபட்டு இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே மோதலை தூண்டும் வகையில் அடித்தளம் அமைக்க பார்க்கிறார்கள். எனவே தமிழ்நாடு காவல்துறை தங்களுக்கான ஒரு சவாலாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு அமைதியான முறையில் நேரடியாக ஊர்வலமாக நாங்கள் போகவில்லை. ஆங்காங்கே ஒரு புள்ளியிலிருந்து ஒரு புள்ளி வரை கைகோர்த்து நாங்கள் நிற்கப் போகிறோம். எங்களை அனுமதிக்க வேண்டும். அரசியல் இயக்கங்களாக, சமூக நீதி இயக்கங்களாக நாங்கள் இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம் என்று காவல்துறை தலைமை இயக்குநரிடத்தில் முறையிட்டிருக்கிறோம்" என்றார்.

கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "மதவாத ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடைவிதித்திருப்பது ஏற்புடையது. ஆனால், ஜனநாயக அமைப்புகள் ஒருங்கிணைக்கும் சமூகநல்லிணக்க மனிதசங்கிலி அறப்போருக்கு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சமூகநல்லிணக்க மனிதசங்கிலிக்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைவரிடம் வலியுறுத்தினோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in