புதுச்சேரியில் ஆதரவு திரட்டினார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு!

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரௌபதி முர்மு இன்று புதுச்சேரிக்கு வந்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனக்கு ஆதரவை திரட்டினார்.

ரங்கசாமி மற்றும் நமச்சிவாயத்துடன் திரௌபதி முர்மு
ரங்கசாமி மற்றும் நமச்சிவாயத்துடன் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்வரும் 18-ம் தேதியன்று நடைபெற உள்ளது. பா.ஜனதா - கூட்டணி கட்சிகளின் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னை வந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு கேட்டு திரும்பினார். இந்நிலையில் இன்று பா.ஜ.க வேட்பாளர் திரௌபதி முர்மு தனக்கான ஆதரவைத் திரட்ட புதுவைக்கு வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தவரை பா.ஜ.கவினர் வரவேற்று தனியார் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திரௌபதி முர்மு, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் தனக்கு ஆதரவு கேட்டு உரையாடினார். புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினரும், 20 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in