`ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று'- உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் பதில் மனுத் தாக்கல்!

`ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று'- உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் பதில் மனுத் தாக்கல்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்படும் ஓபிஎஸ் உரிமை கோரவும் நிவாரணம் பெறவோ எந்த தகுதியும் இல்லை என்றும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று என்றும் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கும், அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வழக்கு முடியும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், விரிவான பதிலை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்ய வேண்டும். அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் தனக்கு ஆதரவாக உள்ளனர். எனவே ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று. இந்த ஒற்றைத் தலைமை என்ற முடிவு எடுக்க கட்சியின் பொதுக்குழுவுக்கே அதிகாரம் அனைத்தும் இருக்கக்கூடிய சூழலில் அந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு தான் இறுதியானது. அதில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டாம்.

இரட்டைத் தலைமை இருக்கும்போது கட்சியின் செயல்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டதால்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதுதான் பொதுக்குழுவில் பிரதிபலித்தது. அதற்குப் பிறகுதான் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வந்துதான் நான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மேலும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை விட்டு அதிமுகவின் கட்சி அலுவலகத்தை சூறையாடி கடுமையான விதிமுறைகளை மீறி செயல்பட்டு இருக்கிறார். அவர் கட்சிக்கு எதிராக செயல்படுபவர். எனவே இந்த விவகாரத்தில் கட்சியில் உரிமை கோரவும் நிவாரணம் பெறவோ ஓபிஎஸ்ஸுக்கு எந்த தகுதியும் இல்லை. பொதுக்குழு கூட்டப்படுவதற்கு முன்னதாகவே ஓபிஎஸ்ஸுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறையை பின்பற்றியே கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in