அரசை நம்பவில்லை, தனியாரை நம்புகின்றனர் பஞ்சாப்வாசிகள்!

தேர்தல் நேரத்தில் துப்பாக்கிகளை பாதுகாக்க நடவடிக்கை
அரசை நம்பவில்லை, தனியாரை நம்புகின்றனர் பஞ்சாப்வாசிகள்!

தேர்தல் சமயத்தில் தங்கள் அரசு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்க மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிடுவது வழக்கம். பஞ்சாபில் அதன் துப்பாக்கிகளின் உரிமையாளர்கள் காவல்நிலையங்களை நம்பமுடியாமல், தனியார் துப்பாக்கி கடைகளில் அவற்றை ஒப்படைத்துள்ளனர்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் சமயங்களில் அரசு உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மீது மத்திய தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். இதில், அரசு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைத்துவிட்டு, தேர்தல் முடிந்த பின் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறுவது உண்டு. இந்த உத்தரவிற்கு அரசு உரிமம் பெற்ற துப்பாக்கிகளால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுவது தடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

இந்தவகையில், பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலிலும் துப்பாக்கிகள் மீதான உத்தரவை மத்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அளித்திருந்தது. அதன்படி, பஞ்சாபிலுள்ள காவல்நிலையங்களில் இந்த துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் ஒப்படைப்பது வழக்கம். இவை அக்காவல்நிலையங்களின் பாதுகாப்பு அறைகளில் பாதுகாத்து வைக்கப்படும். பல இடங்களின் காவல்நிலையங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. இதனால், அரசு உரிமம் பெற்ற தனியாரின் துப்பாக்கி கடைகளிலும் அவை பாதுகாத்து வைக்க ஒப்படைக்கலாம் என்றும் அரசு உத்தரவு உள்ளது. ஆனால், பஞ்சாபில் காவல்நிலையங்களைவிட தனியார் கடைகளில் தம் துப்பாக்கிகளை ஒப்படைப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு காவல்நிலையங்களில் தம் துப்பாக்கிகளுக்கு பாதுகாப்பு உள்ளிட்டப் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும் தெரிந்துள்ளது.

இது குறித்து ‘காமதேனு’ இணையத்திடம் தம் பெயர்களை குறிப்பிட விரும்பாத பஞ்சாப்வாசிகள் கூறுகையில், ‘இதற்கான விதிகளின்படி, எந்த ஒரு தொகையும் துப்பாக்கி உரிமையாளர்களிடம் பெறப்படுவதில்லை. ஆனால், நம் துப்பாக்கிகளை வைப்பதை விட அவற்றை தேர்தலுக்கு பின் மீட்டெடுப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். பல்வேறு சான்றிதழ்களை கேட்டு தொல்லை அளிப்பதுடன் குறிப்பிட்ட தொகையையும் நாம் வீணாகச் செலவிட வேண்டி வருகிறது. இதைவிட, தனியார் கடைகளே நம் துப்பாக்கிகளை பாதுகாக்க சிறப்பான இடமாக உள்ள.’ எனத் தெரிவித்தனர்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இடையிலும், பஞ்சாபின் காவல்நிலையங்களில் சுமார் நான்கு லட்சம் துப்பாக்கிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தனியார் கடைகளில் இதைவிட பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்காக அக்கடைக்காரர்கள், பாதுகாத்து வைப்பதற்கானத் தொகையாக ரூ.2,500 முதல் 4,000 வரையில் வசூலிக்கின்றனர். இது காவல்நிலையங்களில் இலவசம் என்றாலும் அதற்கு பஞ்சாபிகள் தயங்கும் நிலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இத்தனைக்கும் ஜண்டியாலா குரு எனும் இடத்தின் ஒரு தனியார் கடையில் இதுபோல் பாதுகாத்து வைக்கப்பட்ட துப்பாக்கிகளில் 68 கைத்துப்பாக்கிகளும், நீண்ட துப்பாக்கிகளும் திருட்டு போயிருந்தன. இதன் பிறகும் பஞ்சாபிகள் தங்கள் காவல்நிலையங்கள் மீது நம்பிக்கை வைக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in