
வங்கக் கடலில் மட்டுமல்ல, தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் வைக்கத் தகுதியுள்ளது கலைஞரின் பேனா நினைவுச் சின்னம். அதனை அமைப்பதற்கு 90 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துக் கொண்டார்.
இந்த விழாவில் அவர் பேசுகையில், ‘’ வங்கக் கடலில் கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில் நடத்தப்பட்ட கருத்துகேட்பு கூட்டத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பேனா நினைவுச்சின்னம் வைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றாலே பேனா தான் நினைவிற்கும் வரும். அந்த பேனா தமிழகத்திற்கு ஆற்றி தொண்டுகள் ஏராளாம். கலைஞரின் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு தமிழர்களுக்கு வழிகாட்ட வேண்டும் .
அதனால் வங்கக் கடலில் மட்டுமல்ல, தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் அந்த பேனாவை வைக்கலாம். அந்த தகுதி பேனா நினைவுச் சின்னத்திற்கு உண்டு. ஒட்டு மொத்த தமிழர்களின் நினைவு சின்னமாக ஏற்கப்பட வேண்டிய ஒன்று’’ என்றார்.