`சர்ச்சிற்குக்கூட செல்லவிடாமல் நோட்டீஸ் அனுப்பினார்கள்'- பாஜகவுக்கு ஆதரவளித்த சர்ச்சை தலைவர்

`சர்ச்சிற்குக்கூட செல்லவிடாமல் நோட்டீஸ் அனுப்பினார்கள்'- பாஜகவுக்கு ஆதரவளித்த சர்ச்சை தலைவர்
பி.சி.ஜார்ஜ்

கேரளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அள்ளித் தெளித்து, பரபரப்பாக வலம் வரும் ஜனபக்‌ஷம் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ், கேரளத்தில் நாளை நடக்க இருக்கும் திருக்காக்கரைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் ஜனபக்‌ஷம் என்ற அமைப்பை நடத்தி வருபவர் முன்னாள் எம்எல்ஏ-வான பி.சி.ஜார்ஜ். சர்ச்சை மனிதரான இவர், “முஸ்லிம் கடைகளில் டீ குடிக்காதீர்கள். மாற்று மதத்தினருக்கு 'டீ'யில் ஆண்மையைப் பாதிக்கும் பொருள்களைக் கலந்து கொடுக்கிறார்கள்” என போகிற போக்கில் கொளுத்திப் போட்டார். இதற்காக கைது செய்யப்பட்ட இவர், ஜாமீனில் வெளியில் வந்தார். அதன்பின்னரும் தன் பேச்சைக் குறைத்துக் கொள்ளவில்லை. “என்னை கைது செய்து பயங்கரவாதிகளுக்கு பினராயி விஜயன் பரிசு கொடுத்துள்ளார்” என்று முழங்கினார். 33 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்த ஜார்ஜ், கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.

மதரீதியிலான சர்ச்சைப் பேச்சுக்களால் கைதாகி வெளியில் வந்தபின்னும் தொடர்ந்து அவதூறு பேச்சுக்களை ஜார்ஜ் பேசிவந்தார். இதனால் அவரது ஜாமீன் மனுவை ரத்துசெய்யக்கோரி காவல் துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்பேரில் திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்(எண் 2) பி.சி.ஜார்ஜின் ஜாமீனை ரத்துசெய்தது. இந்நிலையில் வேறு ஒரு மேடையில் முதல்வர் பினராயி விஜயனைக் கொச்சைப்படுத்திப் பேசியதாக அவரை நேற்று விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி திருவனந்தபுரம் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

ஆனால் நேற்று ஆஜராகாமல் கேரளத்தின் திருக்காக்கரைத் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். ஜனபக்‌ஷம் கட்சி, திருக்காக்கரை இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து காமதேனு இணையத்திடம் பேசிய பி.சி.ஜார்ஜ், “நேற்று நான் காவல்நிலையத்தில் ஆஜராகாதது உண்மைதான். கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மிகவும் முக்கியமானது. சர்ச்சிற்குக்கூட செல்லவிடாமல் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதனால்தான் நான் ஆஜராகவில்லை. இதேபோல், முஸ்லிம்களுக்கு மட்டுமே பாதுகாவலராக பினராயி விஜயன் செயல்படுகிறார். திருக்காக்கரைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவை ஆதரிக்கிறோம்” என்றர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in