நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி - ஓபிஎஸ் தரப்பு உற்சாகம்

மனோஜ் பாண்டியன்
மனோஜ் பாண்டியன்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதற்கு ஈபிஎஸ் தரப்பு கொண்டாட்டத்தோடு வரவேற்று இருக்கும் நிலையில்,  அதன் முடிவை அறிவிக்கக் கூடாது எனக் கூறியிருப்பதை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக ஓபிஎஸ் தரப்பு உற்சாகத்துடன் கூறுகிறது. 

இந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவையடுத்து ஓபிஎஸ் அணியின்  சட்டமன்ற உறுப்பினரும்,  வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது.," ஜூன் 11 பொதுக்குழு குறித்து நிலுவையில் உள்ள பழைய வழக்கு மார்ச் 22 விசாரணை நடத்தப்பட்டு மார்ச் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் அதுவரை தேர்தலுக்கான முடிவுகளை அறிவிக்க கூடாது என நீதிபதி அறிவித்துள்ளார். சட்ட விரோதமாக நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளோம். நீதிமன்றம் அதை ஆராயும் வரை தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது தெரிவித்துள்ளது. இதை எங்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம்.

கட்சியில் எங்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. எங்களை நீக்குவதற்கு ஈபிஎஸ் யார்?. எங்கள் உரிமையை பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தை நாடி உள்ளோம். அவசர அவசரமாக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.   அதற்காக வாக்காளர் பட்டியல் இல்லை, ஒரு கார்டை வெறும் 100 பேருக்கு கொடுத்திருக்கிறார்கள். அதைவைத்து  பொதுச்செயலாளர் தேர்தலை  நடத்துவேன் என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?

ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள், அப்படிப்பட்ட நிலையில் இவர்கள் நடத்துவது  தேர்தலா? அல்லது பிக்பாக்கெட்டா? என்றுதான் கேட்க வேண்டி உள்ளது. நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்,  நியாயம், தர்மம் கிடைக்கும் வரை போராடுவோம்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும் 24 ம் தேதி வரை ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர்.  அவர் அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

தேர்தலை வைத்து பாருங்கள் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதை தெரியும். அறிவித்திருக்கும் தேர்தலை ரத்து செய்துவிட்டு ஓபிஎஸ் உடன் நானும் போட்டியிடுகிறேன் என்று அறிவித்து பாருங்கள்,  தொண்டர்கள் யாருக்கு  என்பது  அப்போது தெரியும் . அதை விட்டுவிட்டு குறுக்கு வழியில் பொதுச் செயலாளர் பதவியை அடைவதற்கு முயற்சிக்காதீர்கள்" என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in