`பட்ஜெட் அருமை, ஆனால் ஒன்றுதான் ஏமாற்றம் அளிக்கிறது'

வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கம்
`பட்ஜெட் அருமை, ஆனால் ஒன்றுதான் ஏமாற்றம் அளிக்கிறது'

தொழில்துறையில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் பல்வேறு தொழில் வளர்ச்சித் திட்டங்களையும், புதுத்தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் கொள்கையையும் அறிவித்துள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றுள்ள வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம், அடுத்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை மதுரையில் நடத்துவதாக அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் எஸ்.ரத்தினவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நிதி மேலாண்மை குறித்து சிறந்த அறிவாற்றலும், பெரும் அனுபவமும் கொண்ட நம்முடைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கடந்த 8 ஆண்டுகளாக உயர்ந்துகொண்டே வந்த மாநில வருவாய் பற்றாக்குறையை 3.8 சதவீதமாக குறைத்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளையும், தேவைகளையும் வித்தியாசமாக அணுகி, படைப்பாற்றலுடன் கூடிய புதிய திட்டங்களை வழங்கியுள்ள அவரை பாராட்டுகிறோம்.

குறிப்பாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துதல், அதில் 12-வது வகுப்பு வரை படித்த மாணவிகள் மேற்கல்விக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம், திறன்மிகு மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்கு மதுரையில் பயிற்சி மையம் ஏற்படுத்தவிருப்பது, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடலுக்கான மையம், அனைத்துலக செஸ் போட்டியை சென்னையில் நடத்துவது போன்ற பல்வேறு திட்டங்கள் வரவேற்புக்குரியவை.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, மாநிலம் முழுவதும் பரவலாக இருக்க வேண்டும் என்ற முதல்வரின் விருப்பத்துக்கேற்ப தொழில்துறையில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் பல்வேறு தொழில் வளர்ச்சித் திட்டங்களையும், புதுத்தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் கொள்கையையும், தமிழகத்தின் ஏற்றுமதியை 2030க்குள் 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்தத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த நிதிஒதுக்கீடு அறிவித்துள்ளதையும் பாராட்டுகிறோம். தொழில்துறையில் பின்தங்கியுள்ள தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகள் அதிகரித்து தொழில் வளர்ச்சிக்கான அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தென் தமிழகத்தின் நுழைவு வாயிலான மதுரையில் நடத்த வேண்டும் என்ற வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தின் எதிர்பார்ப்பு குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. இருப்பினும் பட்ஜெட் விவாதத்தின் போது அறிவிக்கப்படும் என உறுதியாக நம்புகிறோம்.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்கப்படும் என்பது போன்ற பல்வேறு அறிவிப்புகள் சென்ற திருத்தப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. இவைகள் குறித்து இன்றைய நிலை என்ன என்ற அறிக்கை அடுத்த பட்ஜெட்டில் சமர்ப்பிக்கும் முறையை தமிழக அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மொத்தத்தில் வழக்கம் போல் இதுவும் ஒரு பட்ஜெட் என்றில்லாமல் திறன்மிக்க நிதி நிர்வாகம் தமிழகத்தில் நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது'' என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.