தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற முடியாது; ஆளுநர் அவர் பெயரை மாற்றிக்கொண்டால் நல்லது: வைகோ கிண்டல்

வைகோ
வைகோ

ஆளுநர் அவர் பெயரையும் மாற்றிக்கொண்டால் நல்லது. தியாகத்தால் சூட்டப்பட்ட தமிழ்நாடு என்னும் பெயரை மாற்ற முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

திருநெல்வேலியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆளுநர் தமிழ்நாடு என்பதைக் குறைசொல்கிறார். அவருக்கு வரலாறு தெரியவில்லை. தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என சங்கரலிங்கம் 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் இழந்தார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மசோதா கொண்டுவந்தார்கள். அதை திராவிட முன்னேற்றக்கழகம் ஆதரித்தது. அண்ணா முதல்வரானதும், தமிழ்நாடு என மேற்கோள் காட்டப்பட்ட இலக்கிய உதாரணங்களை எடுத்துக் கூறினார். சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் தமிழ்நாடு என இருக்கிறது. இதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு நான் தமிழ்நாடு எனச் சொல்வேன். நீங்கள் வாழ்க எனச் சொல்லவேண்டும் என அண்ணா சொன்னார்.

அதை காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு வாழ்க என கோஷம் எழுப்பினர். அவ்வளவு பெரிய வரலாறு இதன் பின்னால் இருக்கிறது. இந்த வரலாறுகள் தெரியாமல், ஆளுநர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். ஆளுநரை சங்பரிவார் சக்திகள் இயக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆளுநர் அவர் பெயரையும் மாற்றிக்கொண்டால் நல்லது. தியாகத்தால் சூட்டப்பட்ட தமிழ்நாடு என்னும் பெயரை மாற்ற முடியாது.”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in