மருந்து ஊழல் தொடர்பாக ஈபிஎஸ், விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்படும்!

பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை பேட்டி
மருந்து ஊழல் தொடர்பாக ஈபிஎஸ், விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்படும்!

தமிழக சட்டப்பேரவை பொது கணக்குக்குழுத் தலைவர் கே.செல்வபெருந்தகை தலைமையிலான குழு, மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி வருகிறது. மதுரையில் அந்தக்குழு நேற்று ஆய்வு நடத்தியது. அப்போது குழுவின் தலைவர் கே.செல்வபெருந்தகை அளித்த பேட்டி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“ 2018-19-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விதிகளை மீறி 16.89 ரூபாய்க்கு மதுரை மாவட்டத்தில் மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது” என்று அவர் கூறியது தான் அதற்குக் காரணம். அப்பாவி ஏழை, எளிய மக்கள் நம்பியுள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த அளவு ஊழல் நடந்துள்ளதா என விசாரணையைத் துவக்கினோம்.

மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2018-2019-ம் ஆண்டு மருந்துகள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் கிளம்பின. இதையடுத்து 2018-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மருந்து சேவைகள் இயக்குநர் மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட குழு மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியது.

அப்போது, மருந்து கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் நடந்த இந்த ஊழல் குறித்து மத்திய தணிக்கைக்குழு அளித்த ஆட்சேபணை அறிக்கையின் அடிப்படையில் தான் தற்போது தமிழக சட்டப்பேரவை பொது கணக்குக்குழு ஆய்வு நடத்தியது.

கே.செல்வபெருந்தகை.
கே.செல்வபெருந்தகை.

அதிமுக ஆட்சியில் மருந்து கொள்முதலில் என்ன தான் நடந்தது என்று கே.செல்வபெருந்தகையிடம் கேட்டோம். "2018-2019-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் அளவிற்கு அதிகமான மருந்து கொள்முதல் செய்தது மத்திய தணிக்கைக்குழு ஆய்வில் தெரிய வந்தது. அவர்கள் தந்த ஆட்சேபணை அறிக்கையின்படி தான், அரசு மருத்துவமனையில் பொது கணக்குழு ஆய்வு நடத்தியது" என்றார். மதுரையில் அப்படி என்னதான் நடந்தது என்று அவரிடம் கேட்டோம்.

" ஒரு மாவட்டத்திற்கு இவ்வளவு ரூபாய்க்குத்தான் மருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறையின் விதி உள்ளது. ஆனால், மதுரை மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டு 16.89 கோடி ரூபாய்க்கு மருந்துகள் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, அனைத்து மருந்துகளும் காலாவதியாவதற்கு முன்பே திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. கரோனாவோ, அம்மை போன்ற பேரழிவு நோய்கள் ஏற்படாத நேரத்தில் இவ்வளவு மருந்துகள் எப்படி கொள்முதல் செய்யப்பட்டு, எப்படி அழிக்கப்பட்டது என்று மத்திய தணிக்கைக் குழுவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதுபற்றி விசாரித்த போதுதான் மருந்து கொள்முதலில் ஊழல் நடந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக நடந்த விசாரணையில், இந்த முறைகேட்டில் தொடர்புடைய ஒருவர் அப்ரூவராக மாறியுள்ளார். ஒருவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று செல்வபெருந்தகை கூறினார்.

மருந்து கொள்முதல் ஊழல் மதுரையில் மட்டும் தான் நடந்ததா என அவரிடம் கேட்டதற்கு, " தமிழகம் முழுவதும் காலாவதியான மருந்து கொள்முதலில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய தணிக்கைக்குழு கும்பகோணம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய போது, அங்கு உற்பத்தி தேதியோ, காலாவதி தேதியில்லாமல் மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தனது ஆட்சேபணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கார்ப்பரேஷன் மூலம் தான் தமிழகம் முழுவதும் 23 டிப்போக்களுக்கு மருந்து, மாத்திரைகள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் சோதனைச் செய்யப்படாமல் இந்த மருந்துகள் எப்படி வந்தது என்ற கேள்வியை மத்திய தணிக்கைக்குழு எழுப்பியுள்ளது. ஆக, அதிமுக ஆட்சியில் மருந்து கொள்முதலில் திட்டமிட்டு ஊழல் நடந்துள்ளது. எனவே, இந்த ஊழல் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணை நடத்த வலியுறுத்தப்படும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in