`ஆவின் பொருள் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்'

ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

`ஆவின் பொருள் விலை உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்' என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து விட்டு, இன்று ஆவின் பொருட்களின் விலையை திமுக அரசு உயர்த்தியுள்ளதைப் பார்க்கும்போது, ஒரு பக்கம் மக்களுக்குக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவற்றை பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகிறது.

பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்த திமுக அரசு, தற்போது அனைத்து உப பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. உதாரணமாக, 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரை லிட்டர் தயிர் இன்று முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல், 515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சாதாரண நெய் விலை 535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 கிராம் பாதாம் பவுடர் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக, அதாவது 25 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய ஐஸ்க்ரீம் வகைகளும் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கோடைகாலம் ஆரம்பிக்க இருக்கின்ற சூழ்நிலையில், பால் உபபொருட்கள் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றை பொதுமக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள் இன்னும் அதிகம் வாங்கக்கூடிய நிலையில், இந்த விலை உயர்வு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா போரால் பெட்ரோல், டீசல் விலை எந்த அளவுக்கு உயரப் போகிறதோ, அதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை எந்த அளவுக்கு உயரப் போகிறதோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கின்ற இந்தத் தருணத்தில், யாரும் எதிர்பாராத விதமாக பால் உப பொருட்களின் விலையை உயர்த்தி மக்கள் மீது திமுக அரசு கூடுதல் சுமையை சுமத்தியுள்ளது. எனவே, முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, ஆவின் பொருட்களுக்கான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in