‘பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான்!’ - ஓபிஎஸ் அறிக்கையும், வெளியான பின்னணியும்

‘பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான்!’ - ஓபிஎஸ் அறிக்கையும், வெளியான பின்னணியும்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என அறிக்கை வெளியிட்டுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இந்த அறிக்கையைவிட அது வெளியான சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

66 எம்எல்ஏ-க்களைக் கொண்டு தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது அதிமுக. அரசமைப்புச் சட்டபடி அதிமுகதான் எதிர்க்கட்சி. ஆனால் அதனோடு கூட்டணியில் இடம்பெற்று, கூட்டணி பலத்தால் நான்கு தொகுதிகளில் வென்ற பாஜக, அதிமுகவைவிட மக்கள் மத்தியில் தாங்களே பிரதான எதிர்க்கட்சி எனும் தொனியில் பேசத் தொடங்கியது. அதிமுகவில் அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன், பாஜகவில் சேர்ந்து சட்டப்பேரவை உறுப்பினரானார். அவரேகூட அதிமுகவினருக்கு ஆண்மை இல்லை எனும் தொனியில் பேசியதும் சர்ச்சையானது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் மன்றத்தில் பாஜகவை எதிர்க்கட்சியாக தீவிரமாக முன்னிறுத்தி களமாடிவருகிறார். திமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிடுகிறார். ஊடகங்களும் பாஜகதான் எதிர்க்கட்சி போல் செயல்படுவதாக அவரிடம் தொடர்ந்து கேள்விகளை முன்வைத்து வருகின்றன. இன்னொருபுறத்தில் அதிமுகவை வீழ்த்த பாஜக திட்டமிடுவதாக விமர்சனங்களும் எழுந்தன. இப்படியான சூழலுக்கு மத்தியில்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து இன்று ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையில், ‘ஆளுங்கட்சியின் சர்வாதிகாரத்தைக் கண்டிப்பது, ஆளும்கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை அம்பலப்படுத்துவது என எதிர்க்கட்சிகளின் பணிகளை அண்ணா வரிசைப்படுத்தியுள்ளார். அண்ணாவின் அந்த கூற்றுப்படி கடந்த ஓராண்டு காலமாக சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இயங்கிவரும் இயக்கம் அதிமுக. உண்மை இப்படியிருக்க, அதிமுக எதிர்க்கட்சியாகப் பின்தங்கியிருப்பது போல் மாயத்தோற்றம் உருவாக்குவதும், அதை ஊடகங்களில் விவாதிப்பதும் தொடர்கிறது’ என்று கூறியிருப்பதோடு, கடந்த ஓராண்டு காலத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக நடத்திய போராட்டங்கள் தொடங்கி மக்கள் பிரச்னைகளுக்கு களம் கண்டதுவரை தேதிவாரியாக புள்ளிவிவரங்களையும் கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ்.

மேலும், ‘திமுக மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காமல், மதம் சார்ந்த விசயங்களில் மூக்கை நுழைத்துக்கொண்டிருக்கிறது. அதுவே இந்த ஆட்சியை அகற்றும் பேராயுதம் ஆகும். அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான். அதை இப்போதே உறுதியாகக் கூற முடியும்’ எனவும் அதில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in