கடைசி நாளில் அனல் பறந்த சூறாவளி பிரச்சாரம் ஓய்ந்தது!

நாளை மறுநாள் வாக்குப்பதிவு
திருமாவளவன் பிரச்சாரம்
திருமாவளவன் பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாாள் நடைபெற உள்ள நிலையில், இன்று கடைசிநாள் என்பதால் பிரச்சாரம் அனல் பறந்தது. அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தனர். மாலை 6 மணிக்கு மேல் வெளி ஆட்கள் வெளியேற தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

தமிழகத்தில் 12,604 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த தேர்தலில் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்ததால் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் கடந்த ஒரு வாரமாக தாங்கள் போட்டியிடும் வார்டு பகுதிகளில் பம்பரமாக சுழன்று வந்தனர். இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் ஓய்ந்தது.

ஓபிஎஸ் பிரச்சாரம்
ஓபிஎஸ் பிரச்சாரம்

இதையடுத்து, 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரச்சாரம் செய்ய வந்த வெளி நபர்கள் வெளியேறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், திருமண மண்டபம், சமுதாயக் கூடம் உள்ளிட்டவற்றில் தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அதே நேரத்தில், நாளை வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்குவதில் எந்த தடையும் இல்லை என்றும், அதேவேளையில் பூத் சிலிப் என்ற பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in