மத்திய அரசுக்கு எதிராக துரை வைகோவின் போராட்ட பிரகடனம்!

துரை வைகோ பேசும்போது...
துரை வைகோ பேசும்போது...

திண்டுக்கல் மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமையில் இன்று நடந்தது. அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் சுதர்சன், துணைச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, பின்னர் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. மத்திய அரசு மக்களின் மன நிலையை, சிரமத்தை உணராமல் தொடர்ந்து எரிபொருள் விலையை உயர்த்திக்கொண்டிருக்கிறது. இதனால் உணவு, மருந்து, கட்டுமானப் பொருள், ஆடைகள் என அனைத்து பொருட்களும் விலையேற்றம் அடையும். கரோனா தாக்குதலில் இருந்து விடுபட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மத்திய அரசின் இந்த விலையேற்ற அறிவிப்பு அவர்களின் நலனை எண்ணிப்பார்க்காமல் உள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உடனே விலையை குறைக்காவிட்டால், மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றார்.

முதல்வரின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "இன்னும் 2 வருடங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. ஆளும் பாஜக-வை வீழ்த்த வலுவான எதிர்கட்சிகள் ஒற்றுமையாக, வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் தோன்றியுள்ளது. டெல்லியில் நடந்த திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டது இதற்கான அடித்தளம் என்ற வகையில் முதல்வரின் முயற்சியை வரவேற்கிறேன்" என்றார்.

இலங்கைக்கு இந்தியா நிதி உதவி வழங்குவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கருத்தில்கொண்டு, மத்திய அரசு ஒரு மில்லியன் அளவுக்கு நிதி வழங்கியுள்ளது. இதில் தவறு கிடையாது. ஆனால், நிதி வழங்கும் போது, இலங்கையில் வாழக்கூடிய தமிழர்கள் கடந்த 40 நாட்களாக சந்தித்து வரும் பிரச்சினைகள், கச்சத்தீவு பிரச்சினை, ராமேஸ்வரத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்தது போன்ற பிரச்சினைகளையும் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டிருக்க வேண்டும். இது மத்திய அரசின் முக்கிய கடமை" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in