திருச்சி சம்பவம் திமுக தலைவருக்கு உணர்த்தும் பாடம்?

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்திமுகவில் மீண்டும் உச்சமடையும் உட்கட்சி மோதல்!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு - திருச்சி சிவா எம்பி ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்திருக்கும் மோதல் திமுகவை மேலும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. காவல் நிலையத்துக்குள்ளேயே புகுந்து திமுகவினர் தாக்குதல் நடத்திய விவகாரம் ஸ்டாலின் அரசுக்கும் அவப்பெயரை உண்டாக்கி இருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதி காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவுக்குள் கோஷ்டி மோதல்கள் இருக்கும். அது சில நேரம் வீதிக்கு வந்து வெடித்ததும் உண்டு. ஆனால், ஸ்டாலின் தலைவராக வந்த பிறகு, கட்சிக்குள் கோஷ்டிகள் இருந்தாலும் அது பொதுவெளியில் குடுமிபிடி சண்டையாக வெளிப்படாமல் இருந்தது. இப்போது அதுவும் நடந்துவிட்டது.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் காவல் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். என்றாலும் ஜெயலலிதா ஆட்சியில் தான் காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. இதனால் நல்லது கெட்டது இரண்டுமே இருந்தாலும் பொதுவாக சட்டம் - ஒழுங்கு சீர்கெடாமல் இருந்தது. ஆனால், கருணாநிதி ஆட்சியில் காவல்துறைக்குள் கழகத்தினரின் தலையீடுகள் அதிகமாகவே இருந்தன. தந்தை வழியில் தானும் காவல் துறையை தன் பொறுப்பில் வைத்துக்கொண்ட ஸ்டாலின், காவல் துறையால் பொதுமக்கள் மத்தியில் அரசுக்கு கெட்ட பெயர் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதனால், கலவரச் சூழல் ஏற்பட்ட இடங்களில் கூட பலப்பிரயோகம் செய்து அதை அடக்கமுடியாத அளவுக்கு காக்கிகளின் கைகள் கட்டிப்போடப்பட்டன.

காவல் துறைக்கு கடிவாளம் போட்டதுபோல் கட்சிக்காரர்களுக்கும் எச்சரிக்கை மணி அடித்த ஸ்டாலின், ”யாராவது தவறு செய்தால் சர்வாதிகாரியாகவும் மாறுவேன்” என்று சொன்னது பொதுமக்கள் மத்தியில் அவரது மதிப்பை இன்னும் ஒருபடி கூட்டியது. எந்தவிதத்திலும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இதையெல்லாம் செய்தார் முதல்வர். ஆனால், அவரது எண்ணத்தை எல்லாம் தவிடுபிடியாக்கி இருக்கிறது திருச்சியில் திமுகவினர் நடத்தியிருக்கும் அராஜக அத்துமீறல்கள்.

திருச்சி சிவா - கே.என்.நேரு
திருச்சி சிவா - கே.என்.நேருதிமுகவில் மீண்டும் உச்சமடையும் உட்கட்சி மோதல்!

திருச்சி செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து திருச்சி சிவா எம்பி-யின் ஆதரவாளர்களை தாக்கி இருக்கிறார்கள் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள். இந்தக் தாக்குதலில் அங்கே பணியில் இருந்த பெண் காவலர் சாந்தியும் காயமடைந்தார்.

என்னதான் நடந்தது திருச்சியில்?

திருச்சி சிவாவின் வீடு அமைந்துள்ள திருச்சி எஸ்பிஐ காலனி பகுதியில் புதிய இறகுப்பந்து விளையாட்டு மைதான தொடக்கவிழா நடந்தது. இதற்கான அழைப்பிதழ், கல்வெட்டு போன்றவற்றில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதைக் கண்டித்து, விழாவுக்கு வந்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு சிவாவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டினார்கள். இதில் ஆத்திரமடைந்த நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டின் முகப்பு விளக்குகள், கார், இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சூறையாடினர்.

இந்த நிலையில், அமைச்சர் நேருவுக்கு கருப்புக்கொடி காட்டிய சிவாவின் ஆதரவாளர்கள் 6 பேரை திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது காவல்துறை. இதையறிந்து அங்கு திரண்டு வந்த நேரு ஆதரவாளர்கள், காவல் நிலைத்திற்குள்ளேயே புகுந்து சிவாவின் ஆதரவாளர்களைத் தாக்கினார்கள்.

தாக்குதலைத் தடுத்த காவலர்களையும் தள்ளிவிட்டனர். இவை அனைத்தும் வீடியோக்களாகி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, தாக்குதலில் காயமடைந்த பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் நேரு ஆதரவாளர்களான திமுக நிர்வாகிகள் 5 பேரை கைது செய்தனர். உடனடியாக இவர்களை கட்சியிலிருந்தும் நீக்கியது திமுக தலைமை.

கே.என்.நேரு - திருச்சி சிவா
கே.என்.நேரு - திருச்சி சிவாதிமுகவில் மீண்டும் உச்சமடையும் உட்கட்சி மோதல்!

இந்த சம்பவம் நடந்தபோது பஹ்ரைனில் இருந்த திருச்சி சிவா மறுநாள் காலையில் திருச்சி திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் வேதனையுடன் பேசிய அவர், “என்னை விட கட்சிதான் எனக்கு முக்கியம் என்பதால் பலவற்றை நான் பெரிதுபடுத்தியதில்லை. யாரிடமும் புகார் கூறியதில்லை. ஆனால், என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால், இப்போது நான் எதுவும் பேசும் மனநிலையில் இல்லை” என்றார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சிவாவின் ஆதரவாளர்கள், “ எம்பி-யின் வீடு அமைந்துள்ள பகுதியிலேயே மைதான திறப்பு விழா நடக்கிறது. அதில் ஏன் அவரின் பெயரைப் போடவில்லை எனக் கேட்டு ஜனநாயக ரீதியில் அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டினார்கள். வேறெந்த வன்முறையிலும் இறங்கவில்லை. ஆனால், அமைச்சரின் ஆதரவாளர்கள் எம்பி-யின் வீட்டைத் தாக்கியது மட்டுமின்றி காவல் நிலையத்திலும் புகுந்து தாக்குதல் நடத்தி அராஜகம் செய்திருக்கிறார்கள். எது வந்தாலும் அமைச்சர் நம்மைக் காப்பாற்றிவிடுவார் என்ற தைரியத்தில் தானே இப்படி ரவுடியிஸம் செய்திருக்கிறார்கள்?” என்றார்கள்.

இந்த ஆண்டு ஆளுநர் உரையின்போது ‘தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ என்று அரசின் உரையில் குறிப்பிட்டிருந்த வரிகளை ஆளுநர் படிக்காமல் தவிர்த்தது சர்ச்சையானது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சர்வ நாசமாகிவிட்டது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதையெல்லாம் மெய்யாக்கி இருக்கிறது திருச்சி சம்பவங்கள்,

முதல்வர் ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி திமுகவினர் வன்முறை வெறியாட்டம்: வீடியோ வெளியிட்டு முதல்வரை சாடும் எடப்பாடி பழனிசாமி

ஆட்சிக்கு வரும்வரை எப்படியாவது திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது மட்டுமே திமுகவினரின் எண்ணமாக இருந்தது. அதனால் தங்களுக்குள் இருந்த சொந்தப் பகைகளை எல்லாம் மறந்து இருந்தார்கள். இப்போது அதிகாரம் கைக்கு வந்ததும் ஆங்காங்கே தங்களது அதிகாரத்தை காட்டத் துணிந்துவிட்டார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலேயே இந்த அதிகார யுத்தங்கள் அப்பட்டமாகத் தெரிந்தன. பல நகராட்சிகளில் கட்சி அறிவித்த வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு மேயர், துணைமேயர் பதவிகளை திமுகவினர் கைப்பற்றினர். பல இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையும் அடாவடியாக தட்டிப்பறித்தனர். இவர்கள் மீதெல்லாம் உறுதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததும் அராஜகப் போக்குகள் தொடர வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இப்போதும் கூட நெல்லை திமுக மேயரை மாற்ற வேண்டும் என 35 திமுக கவுன்சிலர்களே கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் பணிகளை மேற்கொள்ளும்போது திமுக வட்டச்செயலாளர்கள் இடையூறு செய்வதாக சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் வெளிப்படையாகவே புலம்பி இருக்கிறார். இப்படியெல்லாம் கட்டுப்பாட்டை மீறும் கழகத்தினர் மீது தொடக்கத்திலேயே கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் திருச்சியில் இப்படியொரு சம்பவமே நடந்திருக்காது.

பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்கிறார் திருச்சி சிவா. இதைவைத்துப் பார்த்தால், எந்தளவுக்கு திருச்சியில் கோஷ்டி யுத்தம் இருக்கிறது என்பதை உணரமுடிகிறது. கே.என்.நேரு - திருச்சி சிவா இடையிலான மோதல் வெளிப்படையாக வெடித்திருக்கிறது. ஆனால், பல மாவட்டங்களில் அது பனிப்போராகத் தொடர்கிறது.

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதியின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாகவே மதுரையில் ஒரு பொது நிகழ்ச்சியில் புலம்பினார். தென்காசி மாவட்ட திமுகவில் தினம் தினம் கோஷ்டி பூசல் அமளிதுமளியாகிறது.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில்
மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில்திமுகவில் மீண்டும் உச்சமடையும் உட்கட்சி மோதல்!

“ நம்மவர்கள் எந்த புதுப் பிரச்சினையையும் உருவாக்கி விடக்கூடாதே என்ற நினைப்பு என்னை தூங்கவிடாமல் ஆக்குகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் மன வருத்தப்பட்டுச் சொன்ன பிறகும் திமுகவினர் திருந்தவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் எல்லாம் நமக்குச் சொல்கின்றன.

திமுக முன்னோடிகள் முதல்வர் ஸ்டாலினை பிரதமர் வேட்பாளர் ரேஞ்சுக்கு கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், மாவட்ட அளவில் மந்திரி பிரதானிகளாக இருக்கும் பலரும் தங்களை ஒரு குருநில மன்னராகவே பாவித்துக்கொண்டு கோஷ்டி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இதற்கு மேலும் ஸ்டாலின் மென்மையான போக்கைக் கடைபிடித்தால் திருச்சி சம்பவங்கள் திக்குக்கு ஒன்றாய் நிச்சயம் நடக்கும். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை இன்னும் கேள்விக்குறியாகும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in