கர்நாடகத் தேர்தலுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?

2024 - மக்களவை தேர்தலுக்கான ’செமிஃபைனல்’
கர்நாடகா வாக்காளர்கள்
கர்நாடகா வாக்காளர்கள்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள், அந்த மாநிலத்துக்கு அப்பாலும் அதிக கவனம் பெற்றுள்ளன. அடுத்த ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலின் முன்னோட்டமாகவும், அதற்கான தகுதிச் சுற்றாகவும் பார்க்கப்படுவதே, கர்நாடகத் தேர்தலை தேசிய அளவில் முன்னிலைப்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு, தேசம் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள சூழலில், நடப்பாண்டு சரவெடியாய் பல்வேறு மாநிலங்கள் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டின் பெரிய அளவிலான முதல் சட்டப்பேரவை தேர்தல் இதுதான். நாகாலந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில், பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து முடிந்த போதும், அவை அளவில் சிறியவை.

கர்நாடகாவை தொடர்ந்து சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவற்றில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி வகிக்கிறது. தெலங்கானாவில் பிராந்திய கட்சியாக இருந்து, தற்போது பாஜகவுக்கு எதிரான புறப்பாடாக, ’பாரத் ராஷ்ட்ரிய சமிதி’ என்ற தேசிய கட்சியாக அறிவித்திருக்கும், கே.சந்திரசேகர ராவின் ஆட்சி நடைபெறுகிறது. இவற்றுடன் இன்னொரு வடகிழக்கு மாநிலமான மிசோரம் தேர்தலுக்காக காத்திருக்கிறது.

இந்த வகையில் கர்நாடகத் தேர்தலின் முடிவுகள், அடுத்தடுத்து சட்டப்பேரவை தேர்தல்களை எதிர்கொள்ளும் இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கக் கூடும். எனவேதான், கர்நாடகத் தேர்தல் முடிவு பாஜக - காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் மிகுந்ததாக மாறி உள்ளது. மேலும், இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகளின் போக்கு, அடுத்த ஆண்டின் மக்களவை தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கும் என்ற வகையிலும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

இவ்வாறு நடப்பாண்டின் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களை, அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கான ‘செமிஃபைனல்’ தகுதிச்சுற்றாக அரசியல் நோக்கர்கள் வர்ணிக்கின்றனர். இந்த செமிஃபைனலின் முதல் மோதலே, மத்தியிலும் பெரும்பான்மை மாநிலங்களிலும் ஆட்சியிலிருக்கும் பாஜகவுக்கு பாதகமாக அமைந்திருக்கிறது.

எனவே, கர்நாடகத் தேர்தல் முடிவுகள் பாஜக என்ற கட்சியின் போக்கை மட்டுமல்லாது, மத்திய அரசு என்ற ஆட்சியின் போக்கிலும் எதிர்வரும் நாட்களில் மாற்றங்களை புகுத்த வாய்ப்பாகி இருக்கிறது. இவையனைத்தும் சேர்ந்து கர்நாடகத் தேர்தல் முடிவுகளை தேசிய அளவில் முக்கியத்தும் உடையதாக மாற்றி இருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in