திமுக கூட்டணியிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும்: இந்து மக்கள் கட்சி திடீர் கோரிக்கை

ஜெ.சாமிநாதன்
ஜெ.சாமிநாதன்

உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது. 

இதுகுறித்து அந்த கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 10 சதவீத இடஒதுக்கீடு சரியானதே என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது.

தேசிய அளவில்  பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,  திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் இத்தீர்ப்பினை வரவேற்றுள்ளன.  ஆனால்,  துரதிருஷ்டவசமாக தமிழகத்தில்  சில அரசியல் கட்சிகள்  தங்களின் பிழைப்பில் மண் விழுந்த ஆத்திரத்தில் செய்வதறியாது இத்தீர்ப்பிற்கெதிராக புலம்பி வருகின்றன.

பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடே உண்மையான சமூக நீதியை பெற்றுத்தரும். தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு நல்லதும், கெட்டதும் நன்றாகவே தெரியும்.  இருந்தபோதிலும் அவர்கள் ஓட்டு வாங்குவதை மட்டுமே மனதில் வைத்து செயல்படுகிறார்கள்.  10 சதவீத இடஒதுக்கீடு பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதை போன்ற  ஒரு மாயத்தோற்றத்தை மக்கள் முன் காட்சிப்படுத்துகிறார்கள்.

ஆனால், உண்மையில் ரோமன் கத்தோலிக் உள்ளிட்ட கிறிஸ்தவ சமூகத்தினரின் 6 பிரிவைச் சேர்ந்தவர்கள், தாவூத், மீர், மைமன், நவாப், லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் 10 பிரிவினைச் சேர்ந்தவர்கள் மற்றும்  செட்டியார் சமூகத்தின் பல பிரிவுகள், வெள்ளாள சமுகத்தின் பல்வேறு பிரிவுகள், பலிஜா நாயுடு, ரெட்டியார்,  ஆதிசைவர்கள்,  வீரசைவர்கள், சிவாச்சார்யார்கள்,  ஓதுவார்கள், நாயர்கள் உள்ளிட்ட  பல்வேறு சாதிய அமைப்பைச் சேர்ந்த பலர் பலன் அடையும் வகையிலேயே இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இதனை வசதியாக மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  10 சதவீத இடஒதுக்கீட்டினால் ஏற்கெனவே இடஒதுக்கீட்டினால் பலனடைந்துவரும் எந்த ஒரு சமூகத்திற்கும் பாதிப்பு கிடையாது என்பதே உண்மை.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்றுள்ளார்.  அப்படியிருக்கையில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக  திமுக கூட்டணியில் உள்ள  அனைத்து கட்சிகளும் பேசி வரும் நிலையில் உண்மையை உணர்ந்து சரியான நிலைப்பாட்டினை எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி சமூக நீதிக்கெதிரான அந்த கூட்டணியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்' என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in