இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரியவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி

இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரியவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி

உள்கட்சி மோதலில் ஈடுபட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனருமான பி. ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சியில் முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையிலான பிரச்சினை சாதி ரீதியிலான பிரச்சினையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி இருக்கிறது.

அதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28-ம் தேதி மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை. எனவே தனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கட்சியில் உறுப்பினராக இருக்கிறாரா? கூட்டம் நடக்கும் பகுதியில் வசிக்கிறாரா? என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், பொது நல வழக்கு என்ற பெயரில் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும், தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த ஒரு வாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறி, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in