டி.டி.வி. தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்! என்ன நடவடிக்கை எடுத்தீங்க... உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அன்னிய செலாவணி மோசடி வழக்கில், முன்னாள் எம்.பி., தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?  என அமலாக்கத்துறையிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரனின் வங்கிக் கணக்கில் 1996 - 97ம் ஆண்டில், வெளிநாட்டில் இருந்து அமெரிக்க டாலர்கள் டெபாசிட் ஆனதாகவும், அவற்றை பிரிட்டனில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும், தினகரனுக்கு எதிராக, அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில், தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதித்து, மத்திய அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில்  மேல்முறையீட்டு ஆணையம், அபராத தொகையை, 28 கோடி ரூபாயாக குறைத்தது. அந்த அபராதத் தொகையை செலுத்தாததால், தினகரனை திவால் ஆனவராக அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது, சிவில் நீதிமன்றத்தால் தீர்வு காணக்கூடிய விஷயம் எனக் கூறி, தினகரனுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து, 2003ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.கலைமதி அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதிகள் "சிறிய விவகாரங்களில், துரிதகதியில் நடவடிக்கை எடுக்கும் அரசு அதிகாரிகள், பெரியளவிலான பண விவகாரங்களில், மந்தநிலையில் செயல்படுகின்றனர்.

நூறு சதுர அடி நிலத்தை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து விட்டால், 40க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், 'புல்டோசர்' வாகனங்களுடன் சென்று, அந்த ஆக்கிரமிப்பை அகற்றுகிறார்கள்.

ஆனால் இந்த வழக்கில் 28 கோடி ரூபாய் அபராதத்தை, இத்தனை ஆண்டுகள் செலுத்தாமல் உள்ள நிலையில் அதை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? முன்னாள் எம்.பி., என்பதற்காக அபராத தொகையை செலுத்த முடியாது என்று கூற முடியுமா? அனைவருக்கும் சட்டம் பொதுவானது தான். ஜனாதிபதி, பிரதமர் என யார் தவறு செய்தாலும், அதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அமலாக்கத் துறை விதித்த அபராதத்தை செலுத்தியிருந்தால், நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருக்காது"  என்று கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in