குடியரசுத்தின விழா அழைப்பிதழில் `தமிழ்நாடு'- ஆளுநரின் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம்?

ஆளுநர் மாளிகை அழைப்பிதழ்
ஆளுநர் மாளிகை அழைப்பிதழ்

இது தமிழகம் என்பதில் உறுதியாக இருந்த தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வட்டாரம் ஒரே வாரத்தில் தமிழ்நாடுதான்  என்று ஏற்றுக் கொண்டுள்ளது தமிழ்நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று பேசியிருந்தார். அது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரை மிகக் கடுமையாக விமர்சித்தன.

அதன் விளைவாக தமிழக சட்டமன்றத்திற்கு உரையாற்ற வந்த ஆளுநரை திமுகவின் கூட்டணிக் கட்சிகள் உரையாற்ற விடாமல் முழக்கமிட்டன. அதனால் தமிழக அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையிலிருந்து சில வரிகளை நீக்கியும்,  சில வார்த்தைகளை சேர்த்தும் ஆளுநர் உரையாற்றினார். அதனையடுத்து ஆளுநர் அவையில் இருக்கும்போதே ஆளுநர் உரைக்கு  கண்டன தீர்மானம் சட்டமன்றத்தில் முதல்வரால்  கொண்டுவரப்பட்டது. ஆளுநர் வெளிநடப்பு செய்தார். 

இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவுக்காக  அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தமிழக அரசு என்றும்,  தமிழக ஆளுநர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  இதுவும் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவரை சந்தித்து ஆளுநர்  குறித்து முறையிட்டிருந்தனர். அதனுடைய தொடர்ச்சியாக ஆளுநரும்  குடியரசுத் தலைவர் சந்தித்து விளக்கம் அளித்தார்.  அதனைத்தொடர்ந்து தமிழகம் என்று  பெயர் மாற்றம் செய்ய சொல்லவில்லை என்று ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் எதிர்வரும் குடியரசு தின விழாவுக்காக ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'தமிழ்நாடு அரசு' முத்திரையுடன், 'தமிழ்நாடு ஆளுநர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.   இதன் மூலம் தமிழகமா?  தமிழ்நாடா ? என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. 

காரைக்குடியில் விருந்து
காரைக்குடியில் விருந்து

இருதரப்புக்கும் இணக்கம்  ஏற்படுத்துவதுபோல இன்னொரு சம்பவமும் நேற்று நடந்தது.  காரைக்குடி பல்கலைக்கழக விழாவிற்கு சென்றிருந்த ஆளுநருக்கு அங்கு விருந்தளிக்கப்பட்டது.  அதில் அந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பெரிய கருப்பன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோருடன் ஒன்றாக ஒரே மேஜையில் அமர்ந்து மூவரும் உணவருந்தினார்கள். இதன் மூலம் ஆளுநருடனான  மோதல் போக்கு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in