மசோதாவைத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது - தமிழிசை

மசோதாவைத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது - தமிழிசை
கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு வரும் புதுவை ஆளுநர் மற்றும் முதல்வர்படங்கள்: எம்.சாம்ராஜ்

“நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது” என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தனக்கு அனுப்பப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை மாநில அரசுக்கே தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியது, தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவையில், இது குறித்து விவாதம் நடத்தக் கோரி தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் ஆளுநரின் இந்தச் செயலை கண்டித்திருக்கிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயிலில், இன்று நடைபெற்ற செடல் திருவிழாவில் முதல்வர் ரங்கசாமியுடன் சென்று கலந்துகொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன், அங்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து தமிழக ஆளுநர் சில கருத்துகளைச் சொல்லி இருக்கிறார். இந்த மசோதா குறித்து சபாநாயகர் திரும்ப எந்த முடிவும் எடுக்கலாம். ஆளுநர்கள் கைப்பாவைகளாக உள்ளனர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எதிராக இருப்பார்கள் என்ற தோற்றத்தை திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர்.

அனைத்து ஆளுநர்களுமே திறமைசாலிகள் தான். ஒரு பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்று தெரிந்தவர்கள்தான். ஆளுநர் அவரின் உரிமையைப் பயன்படுத்தி உள்ளார். மக்களுக்கு நல்லது இல்லை என்றாலும் ஒரு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பலாம். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராகத் தமிழக ஆளுநர் நடந்தார் என்று கூறுவது சரியானது இல்லை” என அவர் கூறினார்.

Related Stories

No stories found.