
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அத்துமீறி பேசி வருவதாகவும், தன்னை முழுமையான அரசியல்வாதியாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’தமிழக ஆளுநர் அண்மைக் காலமாக தன்னை முழு அரசியல்வாதியாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது அவரது பேச்சுக்களின் மூலமாக தெரிகிறது. ஊட்டியில் துணைவேந்தர்களை எல்லாம் அழைத்து வைத்துக் கொண்டு அவரது அரசியல் நிலைப்பாட்டை அவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம் தொடர்பாக ஆளுநரின் நிலைப்பாடு தவறு என்பது வீடியோக்கள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. அதனைத் திசைத் திருப்பத்தான் ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார் என நினைக்கிறேன். எல்லா தரவரிசைகளிலும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் சூழலில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர் எப்படி இந்த உண்மைகளை மறைத்துவிட்டு பேசுகிறார்என தெரியவில்லை.
2021-22-ம் நிதியாண்டில், தமிழ்நாட்டில் 4,79,213 நிறுவனங்கள், 36,63,938 பணியாளர்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது; 2022-23-ல் நிறுவனங்கள் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. மோடி முதலமைச்சராக வெளிநாடு சென்றது தவறில்லை என்றால், முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்வது எப்படி தவறாகும்?
முதலமைச்சர் மீதான விமர்சனம் பிரதமர் மீதான விமர்சனமாக பார்க்க வேண்டும். தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார்; சர்ச்சைகளுக்கு ஆளுநர் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்றார்.