தமிழ்நாடு வளர்வது ஆளுநருக்குப் பிடிக்கவில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்தமிழ்நாடு வளர்வது ஆளுநருக்குப் பிடிக்கவில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு வளர்வது, அமைதியாக இருப்பது ஆளுநர் ஆர்.,என்.ரவிக்கு பிடிக்கவில்லை. இதனால் குழப்பத்தை ஏற்படுத்தி, இந்த மாநிலத்தைக் கெடுக்க நினைக்கிறார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஒரு ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஆர்.என்.ரவி ஆளுநராக வந்தது முதல் தமிழ்நாட்டில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்துவதையே தனது வேலையாக வைத்திருக்கிறார். அவருக்குப் பலமுறை இதனை உணர்த்தியாகி விட்டது. ஆனாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி விடுத்த அறிக்கையானது, அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறுவதாகும். இது நிர்வாக ஒழுக்க மீறலாகும். ஒரு அமைச்சரை நியமிப்பதும், அந்த அமைச்சரை நீக்குவதும் முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமை சார்ந்ததே தவிர வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை.

ஒரு அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதால், அவரைத் தான் நியமிப்பதாகவோ, அதனாலேயே நீக்கி விடலாம் என்றும் பொருள் அல்ல. அந்த அதிகாரம், நியமனப் பதவியில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் ஆளுநருக்கு இல்லை. அதனை அவர் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவருக்கான வேலைகளை மட்டும் அவர் பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் வைத்துள்ளார். அதனைப் போட்டு அனுப்ப வேண்டும். அதை விட்டுவிட்டு தனக்கு உரிமையில்லாத செய்கைகளில் மூக்கை நுழைத்து மூக்கறுபட்டுக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாடு வளர்வது, அமைதியாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. குழப்பம் ஏற்படுத்தி, இந்த மாநிலத்தைக் கெடுக்க நினைக்கிறார். அவரிடம் நல்லெண்ணம் இல்லை” என்று அதில் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in